×

நீலகிரி மாவட்டத்தில் தோடர் பழங்குடியின மாணவி வழக்கறிஞராக தேர்வு

ஊட்டி, பிப்.17:  நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக தோடர் பழங்குடியினத்தை சேர்ந்த நந்தினி என்ற மாணவி வழக்கறிஞராக தேர்வாகி உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது தங்களது குழந்தைகளை  படிக்க வைத்து வருகின்றனர். எனினும், உயரிய படிப்புக்களை யாரும்  முடித்ததில்லை. சமீபத்தில் ஒரு பெண் பல் மருத்துவக்கல்லூரி முடித்து, முதல்  பல் டாக்டர் என்ற பெருமையை சேர்த்தார்.

இந்த வரிசையில் தோடர் பழங்குடியின  வகுப்பில் முதல் வழக்கறிஞர் என்ற பெருமையை நந்தினி சேர்த்துள்ளார்.  ஊட்டி அருகேயுள்ள தவிட்டுகோடு மந்து பகுதியை சேர்ந்த தோடர்  பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர் விவசாயம் செய்து  வருகிறார். இவரது மகள் நந்தினி. தோடர் பழங்குடியின மக்களில் பலர் பல்வேறு  படிப்புகள் படித்து முடித்த போதிலும், முதல் பெண்ணாகவும், முதல்  வழக்கறிஞராகவும் நந்தினி திகழ்கிறார்.
இந்நிலையில், நேற்று நந்தினி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட்  திவ்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இது குறித்து நந்தினி கூறுகையில்,`நான்  எங்கள் தோடர் பழங்குடியின மக்களில் முதல் பெண் வக்கீல். எனக்கு சிறு வயது  முதலே வக்கீல் ஆக வேண்டும் என ஆசை இருந்தது. இதற்காக கடுமையாக உழைத்தேன்.  தற்போது வக்கீலாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். தோடர் மட்டுமின்றி,  பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக பாடுபடுவேன்’ என்றார்.

Tags : student ,lawyer ,district ,Nilgiris ,
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...