×

கோனியம்மன் கோயிலில் பூச்சாட்டு விழா

கோவை, பிப்.17:  கோவை கோனியம்மன் கோயில் தேர் திருவிழா பூச்சாட்டு விழாவுடன் நேற்று துவங்கியது. கோவையின் காவல் தெய்வமான பெரியகடை வீதி கோனியம்மன் கோயில் தேர்திருவிழா தேர் முகூர்த்தக்கால் நடும் விழா கடந்த 15ம் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று இரவு பூச்சாட்டு விழாவுடன் தேர் திருவிழா நடந்தது. இதற்காக பூகம்பம் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பின்னர், அந்த கம்பம் கோயிலில் இருந்து வைசியாள் வீதி, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் கோயிலை அடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூ கம்பம் கோயில் முன்பு நடப்பட்டது. அதற்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். இதையடுத்து, வரும் 22ம் தேதி கிராம சாந்தி, 23-ம் தேதி கொடியேற்றம், அக்னி சாட்டு, 24-ம் தேதி புலி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 25-ம் தேதி கிளி வாகனம், 26-ம் தேதி சிம்ம வாகனம், 27ம் தேதி அன்ன வாகனம், 28-ம் தேதி காமதேனு வாகனத்தில் வீதி உலா, மார்ச் 1-ம் தேதி வெள்ளையானை வாகன ஊர்வலமும், மார்ச் 2-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.

மேலும், முக்கிய நிகழ்வான தேர் திருவிழா மார்ச் 3ம் தேதி மதியம் 2.05 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராஜவீதி தேர் திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை அடையும். இதனை தொடர்ந்து 4ம் தேதி பரிவேட்டை, குதிரைவாகன உலா, 5-ம் தேதி தெப்ப உற்சவமும், 6-ம் தேதி தீத்தவாரி, கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும், மார்ச் 7-ம் தேதி நடக்கும் வசந்த விழாவுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது. கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து தேர் திருவிழா நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கைலாசமூர்த்தி மற்றும் தக்கார் விஜயலட்சுமி ஆகியோர் செய்துள்ளனர்.

Tags : Poochaat ,ceremony ,Koniyamman temple ,
× RELATED விருது பெற்றோரின் போராட்ட வரலாறு: முதல்வர் புகழுரை