×

ஈரான் போரால் இந்தியாவில் எரிவாயு, உரம் தட்டுப்பாடு அபாயம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட ஒன்றிய அரசு மறுப்பது ஏன்? தேர்தல் மனநிலையில் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

 

புதுடெல்லி: மேற்கு ஆசிய நாடுகளில் போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.ஈரான் நாட்டின் உச்ச தலைவர் கமேனி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக இரங்கல் தெரிவிக்கவில்லை. அதேநேரம் ஈரான் தலைவர்களை நேரில் சந்தித்து தூதரக அளவில் தனது தரப்பு இரங்கலை ஒன்றிய அரசு தெரிவித்தது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் சசி தரூர் ஆகியோர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். முன்னதாக, போர் சூழல் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் எச்சரித்திருந்தனர். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை தேசிய அவசர நிலையாக கருதி, எரிவாயு பதுக்கலை தடுக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி வெளிப்படையான விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசியல் விவாதங்களை காட்டிலும், நாட்டின் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் தயார் நிலைக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. போர் சூழலால் விவசாயம், உரம் மற்றும் எரிசக்தி துறைகளில் ஏற்படும் பாதிப்புகளை கையாள அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் அடங்கிய தனிக்குழுக்களை அமைக்க பிரதமர்மோடி உத்தரவிட்டார். இதனிடையே, ‘எரிபொருள் இருப்பு சீராக உள்ளது, எதிர்க்கட்சிகள் தேவையற்ற பீதியை கிளப்புகின்றன’ என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடனான உறவில் சமநிலையை பேண வேண்டியுள்ளதால், அனைத்துக்கட்சி கூட்டத்தில் தர்மசங்கடமான கேள்விகளை தவிர்க்கவே ஒன்றிய அரசு தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. ஈரான் கப்பல்கள் மனிதாபிமான அடிப்படையில் இந்திய துறைமுகங்களில் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளதாக ஒன்றிய அரசு கருதுகிறது.

இதுகுறித்து ஒன்றிய அரசு தரப்பில் கூறுகையில், ‘தேவையான அனைத்து தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால் தனியாக அனைத்துக்கட்சி கூட்டம் தேவையில்லை. தேர்தல் நேரத்தில் அரசை முடக்கவே எதிர்க்கட்சிகள் இத்தகைய கோரிக்கைகளை வைக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்பி சுக்தேவ் பகத் டெல்லியில் அளித்த பேட்டியில், ‘மேற்கு ஆசிய போர் சூழல் குறித்து நேற்று பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த போர் நீண்ட காலம் நீடிக்கும் என்பது ஒன்றிய அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால், மேற்கு ஆசியாவை மட்டும் நம்பியிருக்காமல் மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். குறிப்பாக ஆப்பிரிக்கா, ரஷ்யா அல்லது லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பேசி அங்கிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய நீண்டகால திட்டம் வகுத்திருக்க வேண்டும்.

ஒன்றிய அரசு கொள்கைகளை நன்றாக வகுத்தாலும், அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதுதான் கேள்வியாக உள்ளது. ஒன்றிய பாஜக அரசு எப்போதும் ‘தேர்தல் மனநிலையில்’ மட்டுமே செயல்படுகிறது என்பது கசப்பான உண்மை. தற்போதைய எதார்த்தமான சூழலை ஒன்றிய அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

இது ஒரு கட்சியின் பிரச்னை அல்ல; ஒட்டுமொத்த நாட்டின் பிரச்னை. அரசியல் பதற்றங்களுக்கு அப்பாற்பட்டு, ஏன் ஒன்றிய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மறுக்கிறது? உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அனைவரிடமும் வெளிப்படையாக பேச வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்குவங்கத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடப்பதால், தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு வெளிப்படையாக கருத்துகளை தெரிவிக்க மறுத்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

 

Tags : EU government ,India ,Iran ,war ,NEW DELHI ,Khamenei ,
× RELATED நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம்...