×

தங்கம், பணத்தை வாரி வழங்கும் இந்திய மக்களின் உதவிக்கு ஈரான் தூதர் நெகிழ்ச்சி

 

புதுடெல்லி: ஈரான் நாட்டின் இக்கட்டான சூழலில் அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் காஷ்மீர் மக்கள் தங்களது நகை மற்றும் சேமிப்பு பணத்தை தானமாக வழங்கி மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.போரால் பாதிக்கப்பட்ட ஈரான் மக்களுக்கு உதவும் வகையில் காஷ்மீரின் புத்காம் பகுதியில் உள்ள இமாம் ஜமான் மசூதியில் சிறப்பு நிதி திரட்டும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தாய்மார்களும், சகோதரிகளும் தங்களது நகைகள், செம்பு பாத்திரங்கள் மற்றும் பணத்தை வாரி வழங்கி வருகின்றனர்.

சிறுவர்கள் கூட தங்களது உண்டியல் சேமிப்பை ஈரானுக்காக கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இந்திய மக்களின் இந்த செயலுக்கு இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. இது குறித்து ஈரானிய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘உங்கள் அன்பு மற்றும் மனிதாபிமானத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம். ஈரான் மக்களுடன் தோளோடு தோள் நின்று மனிதாபிமான ஆதரவையும் மனப்பூர்வமான ஒற்றுமையையும் வெளிப்படுத்திய காஷ்மீர் மக்களுக்கு எங்களது இதயப்பூர்வமான நன்றிகள்.

உங்களின் கண்ணீரும் தூய்மையான உணர்வுகளும் எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாகும். நன்றி இந்தியா’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது. சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தனது கணவரின் நினைவாக வைத்திருந்த தங்க நகையை, ஈரானிய மக்களின் துயர் துடைக்க காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண்மணி தானமாக வழங்கியுள்ளார். இதேபோல், வளைகுடா போர் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி காலங்களிலும் புத்காம் பகுதி மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணத்தை ஈரானுக்கு ஆதரவாக வழங்கி தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்திய பழைய சம்பவங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.

Tags : Iran ,NEW DELHI ,Kashmir ,Butgham ,
× RELATED ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தலைவராக முகமது பாஹெர் ஸொல்கதர் நியமனம்