×

ஏட்டு மகனை கத்தியால் குத்திய 2 பழ வியாபாரிகள் கைது

 

சேலம்: ஏட்டு மகனை கத்தியால் குத்திய பழ வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அரண்மனை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அரண்மனை காவல்நிலையத்தில் தலைமைகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்தீப்(22). இவர் சேலம் கோரிமேட்டில் உள்ள சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சந்திப், நேற்று இரவு 8மணிக்கு சட்டக்கல்லூரி பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பைக் மோதியது. இதில் பைக் ஓட்டி வந்தவருக்கும் சந்தீப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கு மற்றொரு பல்சர் பைக் வந்து சந்தீப் மீது மோதியது.

இதில், பல்சர் பைக்கை ஓட்டி வந்தவருக்கும் சந்தீப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதியில் பழக்கடை வைத்திருந்த முருகன், சந்தோஷ்குமார் ஆகியோர் பல்சர் பைக் வாகனம் ஓட்டி வந்தவருக்கு ஆதரவா பேசி சந்தீப்பிடம் தகராறில் ஈடுபட்டனர்.இதில், ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், கடையில் வைத்திருந்த சேரை எடுத்து வந்து சந்தீப் மீது அடித்துள்ளார். முருகன் பழக்கடையில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து சந்தீப்பின் முதுகில் குத்தி விட்டு இருவரும் அங்கிருந்து தப்பினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சந்தீப்பை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்தீப்பிடம் விசாரித்தனர். புகாரின் பேரில், கல்லூரி மாணவர் சந்தீப்பை கத்தியால் குத்திய பழ வியாபாரி முருகன், சந்தோஷ்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Salem ,Mariyappan ,Thanjavur district ,Palace ,Station ,Sandeep ,
× RELATED தியாகராயர் நகரில் பறக்கும்...