×

ஷார்ஜாவில் சரக்கு கப்பல் மீது குண்டு வீச்சு

ஷார்ஜா: வளைகுடா கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் மீது மர்மப்பொருள் வீசப்பட்டதில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. உலக நாடுகளுக்கு தேவையான எரிசக்தி விநியோகத்தில் சுமார் 20 சதவீத பங்கினை கொண்டுள்ள ஹார்முஸ் நீர்சந்தி பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடும் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் தொடர்புடைய வணிகக் கப்பல்களை இலக்காகக் கொண்டு ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்தது. இதனால் அந்த வழியாகச் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கடற்பகுதியில் இருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் ஒரு வணிகக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலை இலக்காகக் கொண்டு அடையாளம் தெரியாத மர்மப்பொருள் ஒன்று வீசப்பட்டது. அது கப்பலுக்கு மிக அருகில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இந்த தாக்குதல் குறித்து இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நிறுவனம் (யுகேஎம்டிஓ) வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறிப்பில், ‘ஷார்ஜாவிற்கு வடக்கே 15 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலின் மாலுமி, கப்பலுக்கு மிக அருகாமையில் மர்மப்பொருள் விழுந்து வெடித்ததாக தகவல் அளித்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இந்த விவகாரத்தில் தலையிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Tags : Sharjah ,Gulf Coast ,Hormuz basin ,
× RELATED அமெரிக்காவின் F-15 போர் விமானத்தை...