×

அமெரிக்காவில் இருந்து நெதர்லாந்து வழியாக மங்களூரு துறைமுகம் வந்தது எரிவாயு கப்பல்: காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு சீராக வாய்ப்பு

மங்களூரு: மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க அமெரிக்காவிலிருந்து கப்பல் மூலம் எரிவாயு வந்து இறங்கியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க நீண்டகால திட்டத்தின் அடிப்படையில், மற்ற நாடுகளிலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 14ம் தேதி முதல் 31ம் தேதி வரை மங்களூரு துறைமுகத்தில் இறக்கப்படும் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணத்தை ஒன்றிய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் முழுமையாக ரத்து செய்து சலுகை அறிவித்தது. இந்தச் சூழலில், சிங்கப்பூர் நாட்டின் கொடியுடன் ‘பைக்ஸிஸ் பயனியர்’ என்ற பிரம்மாண்ட கப்பல், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நெதர்லாந்து துறைமுகத்திலிருந்து சுமார் 16,714 மெட்ரிக் டன் எல்பிஜி சமையல் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை சுமார் 6 மணி அளவில், அந்த கப்பல் மங்களூரு புதிய துறைமுகத்தின் 13வது தளத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த எரிவாயு ‘ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்திற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கிருந்து கர்நாடகா மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் உள்ள எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு இவை கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விநியோகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது வந்துள்ள எரிவாயு இருப்பு, சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டைப் பெருமளவு குறைக்கும். இதனைத் தொடர்ந்து, வரும் 25ம் தேதி ‘அப்பல்லோ ஓஷன்’ என்ற மற்றொரு கப்பல் 26,687 டன் எரிவாயுவுடன் மங்களூரு வரவுள்ளது. இது ஐஓசிஎல் மற்றும் பிபிசிஎல் நிறுவனங்களுக்காக விநியோகம் செய்யப்படும்’ என்று தெரிவித்தனர். இந்த தொடர் வருகை காரணமாக, இந்தியாவில் நிலவி வரும் எரிசக்தி தட்டுப்பாடு சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Mangalore ,US ,Netherlands ,West Asian ,West Asia ,Strait of Hormuz ,
× RELATED இஸ்ரேல் வான்பரப்பில் ஈரான் ஆதிக்கம்: குழந்தைகள் உட்பட 100 பேர் படுகாயம்