×

இஸ்ரேல் வான்பரப்பில் ஈரான் ஆதிக்கம்: குழந்தைகள் உட்பட 100 பேர் படுகாயம்

டெஹ்ரான்: இஸ்ரேல் வான்பரப்பில் ஈரான் ஏவுகணைகள் ஆதிக்கம் செலுத்துவதால் அந்நாடு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஈரான் புரட்சிகர காவல்படையின் விண்வெளிப் பிரிவுத் தலைவர் மேஜர் ஜெனரல் சையத் மஜித் மூசாவி இன்று வெளியிட்ட தகவலில், ‘இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளின் வான்வெளியில் ஈரானின் வீரர்கள் ஏவுகணை ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர். அடுத்தடுத்து நடத்தப்படவுள்ள தாக்குதல்களில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தளபதிகளை திகைக்க வைக்கும்’ என்றார். இதேபோல் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எம்.பி.காலிபாப் கூறுகையில், ‘மிகவும் பாதுகாக்கப்பட்ட டிமோனா பகுதியில் இஸ்ரேலிய ஆட்சியால் ஏவுகணைகளை இடைமறிக்க முடியாவிட்டால், அது போரின் புதிய கட்டத்திற்குள் நுழைவதற்கான அறிகுறியாகும். இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பற்றதாக உள்ளது. இதன் விளைவாக, ஏற்கனவே தீட்டப்பட்ட அடுத்தகட்ட திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

தெற்கு நகரமான ஆராத் பகுதியில் ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை நேரடியாகத் தாக்கியதில் இஸ்ரேலிய வான்பாதுகாப்பு அமைப்பு தோல்வியடைந்தது குறித்து அந்நாட்டு விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது. ஏவுகணையை இடைமறிக்க மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகள் தோல்வியடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ‘ஈரான் வேண்டுமென்றே பொதுமக்கள் மீது ஏவுகணைகளை வீசி ஆராத் மற்றும் டிமோனா பகுதிகளைச் சீரழித்துள்ளது. இது ஒரு அப்பட்டமான போர்க்குற்றம் மற்றும் தீவிரவாதம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

Tags : Iran ,Israel ,TEHRAN ,Major General ,Syed Majid Mujit Mousavi ,Iranian Revolutionary Guard's Space Division ,
× RELATED அம்பத்தூர் திமுக பாக முகவர்கள்...