×

உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நாளை முதல் நீக்குவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு!

டெல்லி: உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நாளை முதல் நீக்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனால் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்க உள்ளது. எரிபொருள் விலையேற்றத்தைக் காரணம் காட்டி ஏற்கனவே டிக்கெட் விலையை சில விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ள சூழலில் தற்போது அது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக உச்சவரம்பை (Fare Cap) நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாளை முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருவதால், விமான நிறுவனங்கள் தங்களின் இயக்கச் செலவு மற்றும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தன்னிச்சையாகக் கட்டணங்களை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2025 டிசம்பர் மாதத்தில், இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்களின் விமானச் சேவைகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாகக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்தன. இதைக் கட்டுப்படுத்தவும் பயணிகளைப் பாதுகாக்கவும், தூரத்தைப் பொறுத்து ஒரு வழிப் பயணத்திற்கு அதிகபட்சமாகச் சுமார் ரூ.18,000 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு தற்காலிகமாக உச்சவரம்பு விதித்திருந்தது.

தற்போது விமானப் போக்குவரத்துத் துறை ஓரளவு நிலைபெற்றுள்ள நிலையில், சந்தை விதிகளைச் சீராக்கும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடு நீக்கப்படுவதாகச் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பண்டிகைக் காலங்கள் அல்லது அவசர காலங்களில் நியாயமற்ற முறையில் கட்டணத்தை உயர்த்தினால் அது தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும், பொதுமக்களின் நலன் கருதி தேவைப்பட்டால் மீண்டும் கட்டணக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

விமான எரிபொருள் (ATF) விலை உயர்வு மற்றும் சர்வதேச அரசியல் பதற்றங்களால் அதிகரித்து வரும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, இந்தக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் விமானக் கட்டணங்கள் மீண்டும் எகிறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகத் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது.

Tags : EU Government ,Delhi ,
× RELATED அமமுக வேட்பாளர்கள் இரட்டை இலையில்...