×

மேற்கு ஆசியாவில் தற்போது நடப்பது ராணுவ மோதல் அல்ல நீண்டகால அழிவுப்போர்: ஆஸ்திரியா ராணுவ ஆய்வாளர் பேட்டி

 

புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழலானது தற்காலிக மோதல் என்பதை கடந்து, நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் தீவிரமான போராக மாறியுள்ளது. ஈரான் மீதான போர் குறித்து ஆஸ்திரிய நாட்டு ராணுவ ஆய்வாளர் டாம் கூப்பர் அளித்த பேட்டியில், ‘தற்போது மேற்கு ஆசியாவில் நடப்பது வெறும் ராணுவ மோதல் மட்டுமல்ல, நீண்டகால அழிவுப்போர். இதற்கு உடனடி முடிவு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஈரான் நாட்டின் பாதுகாப்பு வியூகமானது 1960ம் ஆண்டுகளில் வியட்நாம் கம்யூனிஸ்ட் படைகள் கையாண்ட முறையை ஒத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளிடம் அதீத ஆயுத பலம் இருந்தாலும், ஈரான் தனது ‘மிசைல் சிட்டி’ எனப்படும் பூமிக்கடியிலான ஏவுகணை தளங்கள் மூலம் அதனை எதிர்கொள்கிறது.

மிகவும் சக்திவாய்ந்த பன்கர் குண்டுகளாலும் அழிக்க முடியாத வகையில் இந்த நிலத்தடி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று வாரங்களாக இஸ்ரேல் கடுமையான வான்வழி தாக்குதல்களை நடத்திய போதிலும், ஈரான் வீரர்கள் புல்டோசர்கள் மூலம் ஏவுகணை ஏவும் பாதைகளை சீரமைத்து மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சுழற்சி இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. ஈரான் அரசு சில நாட்களில் வீழ்ந்துவிடும் என்ற கணிப்புகள் தவறாகிவிட்டன. அந்த நாட்டின் ஆட்சி இப்போதைக்கு கவிழ வாய்ப்பில்லை என்பதுடன், அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் இன்னும் அரசுக்கு ஆதரவாகவே உள்ளனர்.

இஸ்ரேல் படைகள் ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது நடத்திய தாக்குதல் மிகவும் முட்டாள்தனமானது. இந்த தாக்குதல் கத்தாரில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த தூண்டுதலாக அமையும். அவ்வாறு நடந்தால் கத்தார் எரிவாயு மற்றும் உரங்களை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு உலக அளவில் பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த போரானது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தவறான கணக்கீடுகளால் உருவானது. இப்போதே போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் கூட, பிராந்தியத்தில் நிலவும் பழிவாங்கும் உணர்ச்சியால் அடுத்த மோதல் எப்போது தொடங்கும் என்பதை கணிக்க முடியாது’ என்று டாம் கூப்பர் தெரிவித்தார்.

Tags : West Asia ,New Delhi ,Tom Cooper ,Iran ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்...