×

சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிரசாரம் செய்வேன்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டி

 

சென்னை: சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிரசாரம் செய்வேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சட்டமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணி வெற்றிக்காக, மாநிலம் முழுவதும் நான் நிச்சயமாக பிரசாரம் செய்வேன். அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட தான் இப்போது, சென்று கொண்டிருக்கிறேன். எனது பிரசாரம் பயணம் திட்டம் தொடர்பாக விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவிப்பேன். கூட்டணியில் நடக்கும் தொகுதி பங்கீடு, பேச்சுவார்த்தையிலும் கலந்துகொள்ள செல்கிறேன்.

இந்தியா கூட்டணியில் நான் சேர்ந்தபோது, இந்த அலையன்ஸ் எதற்காக? என்று கேட்டு, நிறைய பேர் கிண்டல் அடித்து சிரித்தார்கள். எனக்கு என்ன பெரிய லாபம் என்பதை பற்றி நான் யோசிக்காமல், எனது கடமையாக இதை செய்து கொண்டு இருக்கிறேன். இப்போது இந்த இந்தியா கூட்டணி, நாட்டுக்கு தேவை. அந்த காரணத்திற்காக தான், நானும் இந்த கூட்டணியில் இருக்கிறேன்.

ரஜினியுடன் நான் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் வேலைகளை, தேர்தல் முடிந்ததும் தொடங்க இருக்கிறோம். இப்போது எனக்கு தேர்தல் வேலைகள் இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு தான், நானும் ரஜினியும் இணைந்து நடிக்க இருக்கும் படத்தின் பணிகள் தொடங்கும். ஏனென்றால் அந்தப் படத்தில் நானும் நடிக்க வேண்டியது இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பெரம்பூரில் போட்டியிடுகிறாரா, இல்லையா என்பதை நான் ஏன் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். எனக்கு தேர்தல் வேலைகள் அதிகம் உள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியில், தேர்தலில் போட்டியிடுவதற்கு எப்போதும் புதிய முகங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தக் கட்சியில், நான்தான் இருப்பதிலேயே பழைய ஆள். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Tags : India Alliance ,Assembly ,People's Justice Mayam ,Kamal Hassan ,Chennai ,People's Justice ,Maiyam chief ,People's Justice Mayam Party ,Kamalhasan ,Hyderabad ,
× RELATED தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்...