×

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா உபயதாரர்கள் கூட்டம்

திருக்கழுக்குன்றம், மார்ச் 21: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழாஉபயதாரர்கள் கூட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் `பட்சி தீர்த்தம்’ என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரியம்மன் சமேத வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா (11 நாட்கள்) நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி மே 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, உபயதாரர்கள் கூட்டம் நேற்று கோயில் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் தலைமை தாங்கினார். கோயில் நிர்வாக அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சித்திரை திருவிழாவின் 3ம் நாள் திருவிழாவான 63 நாயன்மார்கள் வீதிஉலா வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், பக்தர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு அன்று அதிகாலையிலேயே 63 நாயன்மார்கள் வீதி உலாவை நடத்திட உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என உபயதாரர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதேபோல் சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையையொட்டி கிரிவலம் வரும் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வண்ணம் பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் கழிப்பறை கட்டப்பட்டது.

இந்த, கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்ட இடம் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது. அதனால், அந்த கழிப்பறையை திறக்கக் கூடாது என்று கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வருவதை உபயதாரர்கள், கூட்டத்தில் வியாபாரி சங்க தலைவர் நேதாஜி மற்றும் சிலர் கேள்வி எழுப்பினர். பெண்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் மலையைச் சுற்றி கிரிவலம் வருகின்றனர். அவர்கள் இயற்கை உபாதையை கழிக்க கூட கோயில் நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினர். பின்னர் கோயில் தரப்பில் இந்து சமய அறநிலையத்துறை மேலதிகாரிகளிடத்தில் உரிய அனுமதி பெற்று கழிப்பறையை தொடர்ச்சியாக திறந்து பக்தர்கள் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

Tags : Chithirai festival ,Tirukkazhukundram Vedagireeswarar temple ,Tirukkazhukundram ,Tripurasundariyamman Sametha Vedagireeswarar hill temple ,Theertham ,Tirukkazhukundram, Chengalpattu district ,Chithirai… ,
× RELATED கல்பாக்கம் அனுமின் நிலையம் அருகே...