×

ஈரான் மீதான போரால் இந்தியாவின் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: காஸ் இறக்குமதி 75% சரிவு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பங்குசந்தையில் தொடரும் இழப்பு

புதுடெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் மூண்டுள்ள போரால் இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை, உரத் தட்டுப்பாடு, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு அதிகரித்து உள்ளதால் இந்தியாவின் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் பதற்றத்தால் எரிசக்தி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 75 டாலர் என்ற அளவில் சீராக இருந்தது. அப்போது உலக வர்த்தக வளர்ச்சி 4.6 சதவீதமாகவும், உர இறக்குமதி மற்றும் போக்குவரத்து செலவுகள் கட்டுக்குள் இருந்தன. ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கான எரிசக்தி விநியோகம் எவ்வித தடையுமின்றி சுமூகமாக நடந்து வந்தது. தற்போது நிலவும் சூழல் குறித்து சர்வதேச நிதியம் விடுத்துள்ள அறிக்கையில், ‘மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு மற்றும் கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்களால் ‘எரிசக்தி போர்’ மூண்டுள்ளது. இதன் காரணமாக, இந்த மார்ச் நிலவரப்படி, கச்சா எண்ணெய் விலை 115 டாலரை கடந்து உயர்ந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் 20 சதவீத எண்ணெய் விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், விலை 150 டாலர் வரை உயரக்கூடும்’ என்று கூறியுள்ளது. மேலும் உலக வர்த்தக வளர்ச்சி 1.9 சதவீதமாகக் குறையும் என உலக வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த விலை உயர்வால் இயற்கை எரிவாயு விலை 35 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகள் 40 சதவீத யூரியா இறக்குமதிக்கு மத்திய கிழக்கு நாடுகளையே சார்ந்துள்ளதால், உணவுப் பாதுகாப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வரும் காலங்களில் உணவுப் பொருட்களின் விலை 20 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. சர்வதேச அளவில் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் ஏற்கனவே 12 சதவீதம் உயர்ந்துவிட்டன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவை பொருத்தமட்டில் தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து வந்தது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பெருமளவிலான எல்.பி.ஜி மற்றும் எல்.என்.ஜி எரிவாயு விநியோகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து இந்த கடல்வழி போக்குவரத்து தற்காலிகமாக முடங்கியதால், இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்றைய தகவலின்படி, இந்தியாவின் எல்.பி.ஜி (சமையல், வர்த்தக காஸ்) இறக்குமதியில் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த தட்டுப்பாட்டால் உணவு சேவைத் துறைக்கு நாளொன்றுக்கு 1,300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என தேசிய உணவக சங்கம் எச்சரித்துள்ளது. முன்னதாக, கடந்த 10ம் தேதியன்று, நிலைமையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தி, வீடுகள் மற்றும் உரத் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு வழங்குவதில் முன்னுரிமை அளித்தது.

பொருளாதார ரீதியாக, நேற்று இந்திய பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 2,497 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 23,000 புள்ளிகளுக்கு கீழ் இறங்கியது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 11 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 93 ரூபாயைத் தாண்டி சரிந்து வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வேளாண் துறையைப் பொறுத்தவரை, யூரியா மற்றும் டி.ஏ.பி உரத் தேவையில் 50 சதவீதத்தை இந்தியா மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே பெற்று வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைத் தவிர்க்க ரஷ்யா, பெலாரஸ் மற்றும் மொராக்கோ நாடுகளுடன் இந்தியா நீண்டகால திட்ட அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 115 டாலராக உயர்ந்துள்ளதால், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சியை 7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், ‘கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் நீடித்தால், வரும் மாதங்களில் பணவீக்கம் 0.8 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் வருமானம் குறித்தும் கவலை எழுந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது?
இந்தியாவின் எரிவாயு இறக்குமதி 75 சதவீதம் வரை சரிந்துள்ளதால் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகம் கடுமையாக முடங்கியுள்ளது. இயற்கை எரிவாயு தட்டுப்பாட்டால் யூரியா உள்ளிட்ட உரங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, வரும் காரிஃப் பருவ சாகுபடிக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க ஒன்றிய அரசு தரப்பில், ‘விவசாயிகளின் நலன் கருதி 10 மில்லியன் மெட்ரிக் டன் யூரியாவை கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி எரிசக்தி இறக்குமதியை உறுதி செய்யத் திட்டமிட்டுள்ளோம். ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க இலவச உணவு தானியத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு குறித்தும் நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. எரிசக்தி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மற்றும் ஒன்றிய அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. பசுமை ஹைட்ரஜன் மற்றும் எத்தனால் கலப்பு போன்ற திட்டங்கள் மூலம் இறக்குமதி சார்ந்திருப்பைக் குறைக்க நீண்டகால திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : India ,Iran ,Qas ,New Delhi ,Middle East ,US ,Israel ,
× RELATED வேகம் காட்டும் கூட்டணி கட்சிகள் :...