வாஷிங்டன்: ஈரான் போருக்கு கூடுதலாக $200 பில்லியன் (ரூ.18 லட்சம் கோடி) தேவைப்படுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளார். போருக்கான செலவின கோரிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தை அணுகியுள்ளோம், மோசமான நபர்களை கொல்ல ராணுவத்துக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது என பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் போர்தொடுத்தன. இதற்காக மிகப் பெரிய படையை அமெரிக்கா அனுப்பியது. ஈரான் மீதான தாக்குதல் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர்கிறது. ஈரானில் ஏராளமான இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச சமூகத்தை உலுக்கி வரும் இந்த போர். தற்போது அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது. அதாவது இரு தரப்பும் எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனங்களை குறிவைத்து தாக்க தொடங்கி உள்ளன.
இந்நிலையில் அமெரிக்க ராணுவத் தலைமையகம் ஈரான் போருக்கு கூடுதலாக 200 பில்லியன் டாலர் (ரூ.18 லட்சம் கோடி) நிதி தேவை என கோரிக்கை விடுத்துள்ளது. இது மிகவும் அதிகமான தொகையாகும். இந்த புதிய செலவின கோரிக்கைக்கு அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்குமா என தெரியவில்லை. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் கூறுகையில், “இந்த தொகையில் மாற்றம் ஏற்படலாம். ராணுவத்துக்கு தேவையான நிதியை உறுதி செய்ய நாடாளுமன்றத்தை அணுக உள்ளோம். மோசமான நபர்களை கொல்ல ராணுவத்துக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது என கூறினார்.
