குளத்தூர்: குளத்தூர் அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி, கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. மறுநாள் (11ம் தேதி) பகலில் வேடநத்தம் அருகே காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் உட்பட பல்வேறு அமைப்புகள், கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் கடந்த 9ம் தேதியில் இருந்து காட்டுப்பகுதியில் பைக் ஒன்று நின்றதாக தெரியவந்தது. அதனை கொண்டு விசாரித்தபோது, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு பைக் திருடிக் கொண்டு வரப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காற்றாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, பைக்கை ஒருவர் ஓட்டிச் செல்வது தெரிந்தது.
அந்த படத்தைக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில் அவர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன்(37) என்பது தெரிய வந்தது. அவரை நேற்று முன்தினம் இரவு சாயல்குடி பகுதியில் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 சிறார்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 2020 பிப்.2ம் தேதி கீழஈரால் பகுதியில் பாப்பா (65) என்ற மூதாட்டியின் நகைகளை அபகரித்து விட்டு பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக எட்டயபுரம் போலீசார், 2022ல் மேற்கொண்ட விசாரணையில், தர்ம முனீஸ்வரன் கைது ஆனார். இவ்வழக்கு விசாரணை, தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இதில் கடந்தாண்டு தர்ம முனீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த, அவருக்கு கடந்த டிச.18ல் ஜாமீன் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டிச.24ம் தேதியில் இருந்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதற்காக அவர், சாயல்குடியில் இருந்து வேடநத்தம், குறுக்குச்சாலை வழியாகவே தூத்துக்குடி சென்று வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. சம்பவத்தன்றும் தூத்துக்குடி வந்து சென்ற போதுதான் வேடநத்தம் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
கொலையில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவியின் தந்தை நிருபர்களிடம் கூறுகையில், “கொலையாளி கைது செய்யப்பட்டதால் எனது மகளின் உடலை பெற செல்கிறோம். குற்றவாளிக்கு அதிகட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்று வேறு எந்த இடத்திலும் அசம்பாவிதங்கள் நடக்காது” என்றார். இந்நிலையில், தர்ம முனீஸ்வரனை நேற்று மாலை அவரை தனிப்பிரிவு போலீசார் தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் உள்ள தர்ம முனீஸ்வரன் வசித்து வந்த வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி மீண்டும் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். இதையறிந்த மக்கள் அந்த வீட்டை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
டிஎன்ஏ உறுதி செய்தது
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சியில், தர்ம முனீஸ்வரன் டூவீலரில் வந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் அவரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். தர்ம முனீஸ்வரனின் கையில் நகக் கீறல்கள் இருந்துள்ளது. இது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இதையடுத்து அவரது டிஎன்ஏ மாதிரியை போலீசார் சேகரித்துள்ளனர். மாணவியின் நகங்களுக்குள் இருந்த சதையின் ரத்த மாதிரியும், தர்மமுனீஸ்வரனின் ரத்த மாதிரியும் ஒன்று தான் என டிஎன்ஏ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
32 வழக்குகள் நிலுவை
சாயல்குடி மற்றும் பரமக்குடி பகுதியில் டூவீலர்கள் திருட்டில் ஈடுபட்டு வந்த தர்மமுனீஸ்வரன், திருட்டு மற்றும் அடிதடி வழக்குகளில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்கு சென்றுள்ளார். ஊரோரங்களிலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் வரும் பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் பாலியல் சம்பவங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். சில நேரங்களில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து, பின்னர் அவர்களை கொலையும் செய்திருக்கிறார். இவர் மீது ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 32 வழக்குகள் உள்ளதால் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.
