×

ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் சூழ்நிலையிலும் அதிரடி சரிவு தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5320 குறைந்தது: தேர்தல் நடத்தை அமலால் விலை குறைவை நகை பிரியர்களால் அனுபவிக்க முடிவில்லை; கடைகளில் விற்பனையும் குறைந்தது

சென்னை: ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வரும் சூழ்நிலையிலும் தங்கம் விலை நேற்று அதிரடியாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5320 குறைந்தது. தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் தொடர் தங்கம் விலை குறைவை நகைபிரியர்களால் அனுபவிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடைகளில் விற்பனையும் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து வந்ததது. அதுவும் காலை, மாலை என உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்னும் விலை கடுமையாக ஏறும் என்று பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 13ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. நேற்று காலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300க்கும், பவுனுக்கு ரூ.2160 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14400க்கும் விற்கப்பட்டது. அதேபோல நேற்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.265க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையானது.

நேற்று மாலையும் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்து ஆச்சரியத்தை அளித்தது. அதாவது நேற்று மாலை கிராமுக்கு ரூ.400 குறைந்து ஒரு கிராம் ரூ.13900க்கும், பவுனுக்கு ரூ.3200 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,200க்கும் விற்கப்பட்டது. ஆனால், மாலையில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. தங்கம் விலை நேற்று காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5360 குறைந்தது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.9,760 குறைந்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் கடந்த 13ம் தேதி முதல் நேற்று வரை கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த விலை குறைவை நகை பிரியர்கள் அனுபவிக்க முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்கள் இன்றி ₹50,000க்கு மேல் ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்ல முடியாது. இதனால் திருமணங்கள் மற்றும் விசேஷங்களுக்கு நகை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பெரும் தொகையை எடுத்துச் செல்ல அஞ்சி வருகின்றனர். இத்தகைய கெடுபிடிகளால் பொதுமக்கள் நகை வாங்க தயங்குவதால், நகை கடைகளில் விற்பனை சுமார் 30% முதல் 50% வரை குறைந்துள்ளதாக நகை வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Tags : Iran ,Israel ,US ,Chennai ,
× RELATED 3 நாள்களாக அதிகரித்து வந்த...