மும்பை: 3 நாள்களாக அதிகரித்து வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இன்று 3.41%க்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,613 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 74,091 புள்ளிகளில் வர்த்தகம். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 807 புள்ளிகள் சரிந்து 22,962 புள்ளியில் வர்த்தகமாகிறது.
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, உலகளவில் எண்ணெய் விலை திடீரென உயர்ந்ததால் இந்திய பங்குச்சந்தை கடுமையாக சரிந்துள்ளது. சென்செக்ஸ் சுமார் 2,500 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 74,200 அருகே முடிந்தது. நிப்டியும் 3%க்கு மேல் சரிந்துள்ளது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களின் பங்குகளின் விலையும் சரிவை கண்டுள்ளன. மகிந்திரா அன்ட் மகிந்திரா 5.44%, ஹெச்.டி.எஃப்.சி. பங்கு 5.1%, எல்&டி பங்கு 4.82%, இண்டிகோ பங்கு 4.74% சரிந்துள்ளது. எட்டர்னல், பஜாஜ் பைனான்ஸ், எல்&டி, எம்&எம், ஹெச்.டி.எப்.சி. வங்கி உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்துள்ளது. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது
HDFC வங்கியின் தலைவர் அதானு சக்ரபர்த்தி திடீரென பதவி விலகியுள்ளார். வங்கியின் சில நடைமுறைகள் தனது தனிப்பட்ட மதிப்புகளுடன் பொருந்தவில்லை என்பதே அவரது விளக்கமாக இருந்துள்ளது. இது இந்தியாவின் பெரிய வங்கி என்பதால் இந்த கருந்து முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக HDFC வங்கி பங்கு 8% க்கும் மேல் சரிந்து ரூ.772 என்ற 52 வார குறைந்த நிலையை எட்டியது. இது குறியீடுகளில் பெரிய அளவில் அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் மொத்த வங்கி பங்குகளுக்கும் இதன் தாக்கம் எதிரொலித்தது.
இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக 92.89 என்ற புதிய குறைந்த நிலையை எட்டியுள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்களை மேலும் எச்சரிக்கையாக மாற்றியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் மத்தியிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5% க்கும் மேல் உயர்ந்து ஒரு பேரலுக்கு 113 டாலராக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கி, மத்திய வங்கிகள் கடுமையான கொள்கைகளை பின்பற்றும் சூழ்நிலையை உருவாக்குகிறது.
