பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை கட்டுபாடின்றி நடத்தக் கோரி இந்து அமைப்பினர் உண்ணாவிரதம்

ஊட்டி,பிப்.16: பொக்காபுரம் கோயில் திருவிழாவை எவ்வித கட்டுபாடுகளும் இன்றி நடத்த கோரி இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் ஊட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி அருகேயுள்ள ெபாக்காபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் திருவிழா நடைபெறும். இதனை நீலகிரி மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

இக்கோயில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கில் கோயில் திருவிழாக்கள் நடத்த தளர்வு அளிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் கோயில் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் பொக்காபுரம் மாரியம்மன் திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

இதன் அடிப்படையில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்தாண்டுக்கான பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும், தேரோட்டம் ரத்து, சிறப்பு பஸ்கள் இயக்கம் ரத்து, இது தவிர வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள், வயதானவர்கள், குழந்தைகள் திருக்கோயிலுக்கு வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிகமாக டென்ட் அமைத்து தங்குதல், தற்காலிக கடைகள் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுபாடுகள் விதித்தது.

அனைத்து கட்டுபாடுகளையும் ரத்து செய்து கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்டது போல் திருவிழாவை விமர்சையாக நடத்த கோரி பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஊட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில் நேற்று திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுபாடுகள் தளர்த்தப்படும் வரை போராட்டத்தை விலக்கி கொள்ள போவதில்லை எனவும் தெரிவித்தனர். இதனிடையே அசம்பாவித சம்பவங்கள் ஏதுவும் ஏற்பட்டு விடாத வகையில் டவுன் டிஎஸ்பி., மகேஷ்வரன் தலைமையில் ஊட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories:

>