திருப்பூர்: திருப்பூரில் தனியார் காஸ் ஏஜென்சியில் பதுக்கி வைக்கப்பட்ட 123 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் அடுத்த அருள்புரம் பகுதியில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தனி வட்டாட்சியர் மோகனன் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் அருள்புரம் பகுதியில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வின்போது, அங்குள்ள ஒரு காலி இடத்தில் எவ்வித அரசு அனுமதியோ அல்லது உரிமமோ இல்லாமல் தனியார் காஸ் ஏஜென்சி நிறுவனத்திற்குச் சொந்தமான சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ஆபத்தான முறையில் வைக்கப்பட்டிருந்த 123 எரிவாயு சிலிண்டர்களை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து, குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வருவாய்த் துறையினருடன் இணைந்து 123 சிலிண்டர்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் உரிமம் இல்லாமல் சிலிண்டர்களைப் பதுக்கிய ஏஜென்சி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் சிலிண்டர்கள் பதுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
