×

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது; நாகராஜா கோயில் திடலில் பக்தர்கள் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி: மண் மேடுகள் அகற்றப்பட்டன

 

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அமலுக்கு வந்துள்ளது. நாகர்கோவில் நாகராஜா கோயில் மிகவும் பழமையான ஆலயம் மட்டுமின்றி நாகருக்கு தனிஆலயமாக உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானம் மட்டுமின்றி களக்காடு மன்னரும் இங்கு வந்து நோய் நீங்கி சென்றதாக கூறப்படுகிறது. மேலும், நாகதோஷம் தீர்க்கவும், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், பெங்களூரு, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் தினசரி பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வருபவர்கள், நாகராஜா கோயில் திடலில் தங்களது கார், வேன், பஸ்களை நிறுத்தி செல்வது வழக்கம்.

ஆனால், நாகராஜா கோயில் திடலில், லாரிகள், சரக்கு வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் ஆகியன நிறுத்தப்பட்டு இருப்பதால், அந்த பகுதி வண்டி பேட்டை போன்று காணப்பட்டது. இந்த திடலில் சிறுநீர் கழிப்பது, குப்பைகள் கொட்டி, சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டது. சில நேரங்களில் சில கள்ளகாதல் ஜோடிகள், கார்களில், சுற்றி மக்கள் பார்ப்பதை பற்றி கவலைப்படாமல், திடலில் காரை நிறுத்தி உல்லாசமாக இருக்கும் சம்பவங்களும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இது இந்த பகுதி மக்கள் மட்டுமின்றி கோயிலுக்கு வரும் பக்தர்களை முகம் சுழிக்க செய்தது.

இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள நாகராஜா கோயில் பக்தர்கள் சங்கமும் நீண்ட நாட்களாக மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மனுக்கள் அனுப்பி வந்தது. இந்தநிலையில், கடந்த மாதமே இந்த கோயில் திடலை சுற்றி நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்றது. மாநகராட்சி சார்பில், போடப்பட்டிருந்து குழாய்கள் அகற்றப்பட்டதுடன், இந்த திடலை தூய்மையாக பராமரிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக நேற்று திடலில் கொட்டப்பட்டிருந்த மண் மேடுகளை அகற்றி அவற்றை சமன் செய்யும் பணி நடந்தது.

மேலும், திடலில் கோயிலுக்கு வரும் கார், வேன்கள் மற்றும் பஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்ட்டன. இதற்காக திடலில் கோயில் தெற்கு வாயில் முன்பு உள்ள நடைமேடை பாதை வழியாக திடலுக்குள் செல்லும் பாதை நீங்கலாக இதர நடைமேடை வாகனங்கள் செல்லும் இடைவெளி பாதைகள் பேரிகார்டுகள் அமைத்து அடைக்கப்பட்டன. முன்பு கோயில் திடலில் மாநகராட்சியால் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, கோயிலுக்கு வரும் வாகனங்கள் கட்டணமின்றி நிறுத்தி கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாநகராட்சி சார்பில், காவலர் நியமிக்கப்பட்டு, கோயில் திடலில், கோயிலுக்கு வரும் வாகனங்கள் தவிர வேறு வாகனங்கள் நின்றால், அவற்றை வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதற்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. இந்த பகுதி மக்களும் வரவேற்றுள்ளனர்.

நிழற்குடை அமைக்கப்படுமா?
தற்போது திடலில் கண்காணிப்பில் ஈடுபடும் செக்யூரிட்டிகள், வெயிலில் காய்ந்த படி கண்காணிக்கின்றனர். கோயில் அருகே ஆட்டோ ஸ்டான்டில் நின்றபடி கண்காணித்து, வாகனங்களை முறைப்படுத்துகின்றனர். இதுபோல், சில நேரங்களில் வயதானவர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், அவர்கள் மிகவும் உடல் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே மாநகராட்சி செக்யூரிட்டி பிரிவில் உள் இளவயதினரை பணியில் அமர்த்தி விட்டு, வயதானவர்களை, மாநகராட்சி அலுவலகங்கள் அல்லது, கிருஷ்ணன் கோயில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூங்கா போன்ற இடங்களில் நியமிக்கவும், இங்கு பணியில் ஈடுபடும் காவலர்கள் அமர நிழற்குடை அமைக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nagaraja Temple ,Nagercoil ,Nagercoil Nagaraja Temple ,Nagar ,Travancore ,Kalakkadu ,
× RELATED திருநங்கையை அரவாணி என்பதா..? ஒன்றிய...