×

வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

சின்ன வயசில் வீட்டில் அம்மா, பாட்டி எல்லாம் குழந்தைகளுக்கு தங்களுக்கு தெரிந்தவற்றை சொல்லிக் கொடுப்பார்கள். அவர்கள் பள்ளியில் சேர்ந்து மாணவர்களானதும், முழுக்க முழுக்க ஆசிரியர்கள்தான் அவர்களுக்கு அனைத்து பாடங்களும் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால், அந்த ஆசிரியர்களுக்கே மாணவர்களுக்கு எப்படி பாடம் சொல்லித் தரவேண்டும் என்று பயிற்சி அளித்து வருகிறார் சென்னையை சேர்ந்த உமா மகேஸ்வரி. இவரின் ‘சூப்பர் ஸ்டார் அகாடமி’யில்தான் பள்ளியில் பெண்கள் ஆசிரியராக பணிபுரிவதற்கான அனைத்து பயிற்சிகளும் அளித்து வருகிறார்.

‘‘நான் ஆசிரியராகத்தான் வேலை பார்த்து வந்தேன். அப்போதுதான் எனக்கு மான்டசரி கல்விமுறைப் பற்றி தெரிய வந்தது. இது ஒரு சர்வதேச கல்விமுறை என்பதால் அதற்கான பயிற்சியினை நான் 2006ல் எடுத்தேன். பயிற்சி முடித்த பிறகு நான் ஆசிரியராக வேலை பார்க்க திட்டமிட்ட போது, நான் பயிற்சி பெற்ற மையத்திலேயே என்னை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சியாளரா சேரச் சொன்னாங்க. அந்த சமயத்தில், நாம வேறு ஒருவருக்கு வேலை பார்ப்பதற்கு பதில் நாமே ஏன் ஒரு பயிற்சி மையத்தினை ஆரம்பிக்கக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

மேலும், மான்டசரி கல்வி முறை ஒவ்வொரு பள்ளிகளும் பின்பற்ற வேண்டியது என்பதால் இதற்கான டிமான்ட் அதிகமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. இதை மனதில் கொண்டுதான் நான் என்னுடைய பயிற்சி மையத்தினை துவங்கினேன். இதன் மூலம் பல ஆசிரியர்களை உருவாக்க விரும்பினேன்.

மான்டசரி கல்வி என்பது சர்வதேச அளவிலான சுல்விமுறை, இதனை இந்திய கல்வி முறையில் இணைக்க முடியாது. காரணம், இங்கு ஆசிரியர் வேலைக்கு பி.எட் படிச்சிருக்க வேண்டும். அதனால் நான் என்னுடைய பயிற்சி மையத்தினை சர்வதேச அளவில் பதிவு செய்திருக்கிறேன். அப்போதுதான் எங்களின் பயிற்சி மையத்தில் நாங்க அளிக்கும் சான்றிதழை பள்ளிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, எங்களிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரமுடியும்.

மேலும், நாங்க பயிற்சி அளிக்கும் முறையினை ஆய்வு செய்த பிறகுதான் எங்க மான்டசரி ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பாங்க. நாங்க தமிழ்நாடு மட்டுமில்லாமல் மத்திய அரசு மற்றும் சர்வதேச அளவில் பதிவு செய்திருப்பதால், தமிழ்நாடு, இந்தியா மட்டுமில்லாமல் அரேபிய நாடுகளிலும் அவர்கள் வேலை பார்க்க முடியும்” என்றவர் ஆசிரியர் பயிற்சி அளிக்கும் முறைகள் குறித்து விவரித்தார்.

‘‘மான்டசரி என்பது சர்வதேச அளவிலான பயிற்சி என்றாலும், அதற்கான தனிப்பட்ட பயிற்சி முறைகள் உள்ளன, அதன் அடிப்படையில்தான் நாங்க பயிற்சி அளிக்கிறோம். இங்கு மான்டசரி, மான்டசரி கிண்டர்கார்டன் மற்றும் நர்சரிக்கான டிப்ளமோ பயிற்சி அளித்து வருகிறோம். மான்டசரி கல்வி முறைகளை மட்டுமே பின்பற்றும் பள்ளிகள் சென்னையில் மிகவும் குறைவு.

அவர்கள் மான்டசரி மட்டுமில்லாமல் உடன் கிண்டர்கார்டன் மற்றும் நர்சரி முறையிலும் பாடங்களை சொல்லித் தருகிறார்கள். அதனால்தான் எங்களுடைய பயிற்சி மையத்தில் மான்டசரி முறையினை கிண்டர்கார்டன் மட்டுமில்லாமல் நர்சரி அதாவது, 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கான பயிற்சி அளிக்கிறோம். அப்போது தான் ஆசிரியரால், மூன்று பாட முறைகளில் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களின் டீச்சிங் முறையினை கையாளமுடியும்.

சொல்லப்போனால் தற்போது பல அரசுப் பள்ளிகளிலும் மான்டசரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வேலைக்கு நியமிக்கிறார்கள். +2 வரை படித்திருப்பவர்கள் மான்டசரி மற்றும் கிண்டர்கார்டன் பயிற்சி பெறலாம். பட்டப்படிப்பு பெற்றவர்கள் மான்டசரி கிண்டர்கார்டன் மற்றும் நர்சரிக்கான பயிற்சி எடுக்கலாம். இவர்கள் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுக்கலாம்.

ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு எவ்வாறு பாடங்கள் எடுக்க வேண்டும் என்று மட்டுமே தெரிந்து கொள்ள கூடாது. பாட முறைகள் மட்டுமில்லாமல், ஆசிரியர் குழந்தைகளுக்கு இடையே உள்ள உறவு மற்றும் பள்ளியின் செயல்பாடு குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் குழந்தைகளின் சைக்காலஜி, பள்ளி நிர்வாகம், நியூட்ரிஷன் மற்றும் டயட், சைல்ட் கம்யூனிகேஷன், ஸ்பீச் தெரபி, ஸ்பெஷல் குழந்தைகளுக்கான கல்வி போன்ற பயிற்சிகளும் இதில் அடங்கும். ஒவ்வொரு ஆசிரியருக்கும் குழந்தைகளின் உளவியல் தெரிந்திருப்பது அவசியம். அதன் மூலம் அவர்களின் தனிப்பட்ட திறமை என்னவென்று அறிந்து அதற்கேற்ப அவர்களை ஊக்குவிக்க முடியும்.

பள்ளி நிர்வாகம் பொறுத்தவரை ஒரு பள்ளி எவ்வாறு செயல்படுகிறது, தலைமை ஆசிரியரின் பங்கு என்ன என்பதையும் ஆசிரியராக இருப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் வளரக்கூடிய வயசில்தான் அவர்கள் பள்ளியில் இணைவார்கள். அதனால் குழந்தைகளுக்கு என்ன சத்துள்ள ஆகாரம் கொடுக்க வேண்டும் என்ற டயட் முறைகளை ஒவ்வொரு ஆசிரியரும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால், பெற்றோர்களிடம் குழந்தைகளுக்கு என்ன ஆரோக்கியமான உணவுகளை கொடுக்கலாம், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்று புரிய வைக்க முடியும்.

சைல்ட் கம்யூனிகேஷன், சில குழந்தைகள் வாய் திறந்து பேசவே மாட்டாங்க. ஒரு சில குழந்தைக்கு பேசுவதில் சிக்கல் இருக்கும். அதை ஒரு ஆசிரியராக போக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு நாங்க கொடுத்து வருகிறோம். மேலும், மான்டசரி, கிண்டர்கார்டன் போன்ற பாடங்கள் பெரும்பாலும் செயல்முறை கல்வித் திட்டம் என்பதால், அதற்கான பொருட்களை எவ்வாறு உருவாக்க வேண்டும், அதனை பயன்படுத்தும் முறைக்கான பயிற்சிகளுக்கு தனிப்பட்ட லேப்களை எங்களின் அனைத்து கிளைகளிலும் அமைத்திருக்கிறோம். இதன் மூலம் பயிற்சி பெறுபவர்கள் செயல்முறை பயிற்சியினையும் மேற்கொள்ள முடியும்.

ஒவ்வொரு வருடமும் கல்வி முறையில் ஏற்படும் மாற்றம் மற்றும் பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப எங்களின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். இவை தவிர ஃபோனிகஸ், அபாகஸ், வேதிக்மாத், AIயினை எவ்வாறு பயன்படுத்தலாம், இன்டர்வியூக்கு எவ்வாறு தயாராவது மற்றும் சாப்ட் ஸ்கில் குறித்த பயிற்சியும் உண்டு” என்றவர், இதுவரை 3000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளித்துள்ளார்.

‘‘பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான டிமான்ட் அதிகமாக உள்ளது. எங்களின் பயிற்சி மையத்திற்கு சென்னையில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. பள்ளிகளில் டிமான்ட் குறித்து எங்களிடம் பயிற்சி பெற்றவர்களை அங்கு நியமிக்கிறோம். எங்களிடம் பயிற்சி பெற வருபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அந்தந்த துறையில் திறமை வாய்ந்தவர்கள். அதாவது, நியூட்ரிஷன் மற்றும் டயட் குறித்து உணவியல் நிபுணர் பயிற்சி அளிப்பார்.

ஆங்கிலம் சரளமாக பேச பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்திருக்கிறோம். இவ்வாறு ஒவ்வொரு பாடங்களுக்கும் தனிப்பட்ட ஆசிரியர்கள் இருப்பதால், ஒரு ஆசிரியர் பயிற்சிக்கு தேவையான அனைத்தும் முறையாக எங்களால் சொல்லித்தர முடிகிறது. எங்களின் அடுத்த கட்டம், மான்டசரியில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வெளிநாடுகளிலும் நியமனம் செய்வதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறோம். அதற்கு தனிப்பட்ட பாடமுறை என்பதால், அதனை வரும் வருடங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

சென்னையில் மட்டுமில்லாமல் தருமபுரி, சத்தியமங்கலம், கோவில்பட்டி போன்ற இடங்களிலும் கிளைகள் உள்ளன. இவை மட்டுமில்லாமல் எங்களை அணுகும் பள்ளிகளில் மான்டசரி லேப்கள் அமைத்து தருகிறோம். ஆசிரியர்களுக்கு மான்டசரி குறித்த வர்க்ஷாப்பும் நடத்தி வருகிறோம். அடுத்து பிளேஸ்கூல் அமைக்க விருப்பம் உள்ள பெண்களுக்கு, அதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தருகிறோம்.

சில பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்ய விரும்புவாங்க. அவர்களுக்கு ஃபோனிக்ஸ், வேதிக் மாத், அபாகஸ் போன்ற ஸ்பெஷல் ஸ்கில் பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்கள் தனிப்பட்ட முறையில் பயிற்சிக்கூடம் அமைக்கவும் உதவி செய்கிறோம். ஒரு சில பெண்கள் சிறப்பு ஸ்கில் பயிற்சியுடன் சேர்த்து டியூஷனும் எடுக்கிறார்கள். இவ்வாறு பல தொழில் முறைகளை பெண்களுக்கு ஏற்படுத்தித் தர முக்கிய காரணம் பெண்களும் தொழில்முனைவோராக மாற வேண்டும் என்பதுதான். வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது… நாம்தான் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார் உமா மகேஸ்வரி.

தொகுப்பு:  ரிதி

Tags : Kumkum ,
× RELATED பத்மஸ்ரீ விருதுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம்!