தூத்துக்குடி: விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி கொலை வழக்கில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி, கடந்த 10-ந்தேதி இரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. மறுநாள் காலையில் அந்த மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி அறிந்த குளத்தூர் போலீசார், மாணவியின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே மாணவி கொலை வழக்கை தீவிரமாக விசாரிக்க மாவட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் சம்பவம் நடந்த இடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் மாணவியின் உடன்படித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட சந்தேகப்படும் வகையிலான 20-க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து பல்வேறு கோணங்களில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி கொலை வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். செல்போன் சிக்னலை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சாயல்குடியை சேர்ந்த முனீஸ்வரனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
