×

அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்கணும்: விக்கிரமராஜா பேட்டி

தஞ்சாவூர்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூர் கீழவாசலில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருவாரூரில் மே 5ம்தேதி வணிகர்தின 43வது மாநாடு நடக்கிறது. அதில் மாநிலம் முழுவதும் இருந்து 5 லட்சம் வணிகர்கள் கலந்து கொள்வார்கள். ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் வருகை போன்றவற்றிற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளோம்.

தேர்தல் நடத்தை விதிமுறை காலத்தில் ரூ.50,000த்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்து வருகின்றனர். மருத்துவ செலவுகளுக்கு பணம் எடுத்து சென்ற பெண் ஒருவர் கதறி அழுததை பார்த்தோம். வணிகர்கள் பணம் எடுத்து செல்ல ரூ.50 ஆயிரம் என்பதை ரூ.2 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கையை மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தி உள்ளோம்.

தமிழ்நாட்டில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அரசியல் கட்சிகள் இலவசம் வழங்க கூடாது என்பது எங்கள் கருத்து. ஏழை, எளிய மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் அதிகாரிகள் வணிகர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Wickramaraja ,Thanjavur ,Tamil Nadu Traders' Association ,Keelavasal, Thanjavur ,43rd Traders' Day conference ,Thiruvarur ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில் மார்ச் மாத உண்டியல் வருவாய் ரூ. 4.36 கோடி