தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டாலே, ஒருபுறம் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரங்களும், மறுபுறம் பறக்கும் படையினரின் அதிரடி சோதனைகளும் களைகட்டும். ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையத்தின் பழைய விதிகளுக்கும், இன்றைய ‘தங்கம்’ போன்ற விலைவாசி உயர்வுக்கும் இடையே நடக்கும் மல்யுத்தத்தில் சிக்கித் தவிப்பது என்னவோ சாமானிய மக்கள் தான்.
தேர்தல் ஆணையத்தால் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட ‘₹50,000’ என்ற ரொக்கப் பண வரம்பு இப்போதும் தொடர்கிறது. ஆனால், காலச்சக்கரம் சுழன்ற வேகத்தில் தங்கத்தின் விலை இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் (8 கிராம்) ₹1,17,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் நகை வாங்கப் போகும் நபர் கூட இன்று ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கையில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், தேர்தல் விதிப்படி ஆவணங்கள் இன்றி ₹50,000-க்கு மேல் கொண்டு சென்றால் அது ‘கருப்புப் பணமாக’ கருதப்பட்டு விடாதே பிடி என்று கூறி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது. ‘நகை வாங்கப் போகும் கையில் நகைச்சுவையாகத் தெரிகிறது இந்த ₹50,000 லிமிட்’ என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இந்தத் தேர்தல் விதிகளால் அரசியல்வாதிகளை விட சிறு வியாபாரிகளே அதிகம் அலைக்கழிக்கப்படுகின்றனர். பூ மார்க்கெட், காய்கறி சந்தை, மீன் மற்றும் கால்நடை சந்தைகளில் இன்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை விட ரொக்கப் புழக்கமே அதிகம். ஒரு மாடு வாங்க வேண்டும் என்றால் கூட இன்று ₹1.5 லட்சம் வரை தேவைப்படுகிறது. உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்லும் போது பறிமுதல் செய்யப்பட்டால், அதை மீட்க நாட்கணக்கில் அலைய வேண்டியுள்ளது. இது சிறு தொழில்களை முற்றிலுமாக முடக்குவதாக வணிகர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, பண வரம்பை ₹2 லட்சம் வரை உயர்த்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. ‘சிறு வியாபாரிகளுக்குத் தொந்தரவு தரக்கூடாது’ என அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதே தவிர, பண வரம்பு குறித்த அதிகாரப்பூர்வ உயர்வு இதுவரை அறிவிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் விதிகளில் மாற்றம் செய்யாத பட்சத்தில், ₹50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்வோருக்கு வங்கி ரசீது அல்லது தொழில்முறை ஆவணங்கள் மட்டுமே ஒரே பாதுகாப்பு. ‘விலைவாசி உயர்ந்துவிட்ட காலத்தில் பழைய கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்த்தால் எப்படித் தெரியும்?’ என்பதுதான் தேர்தல் ஆணையத்தை நோக்கி மக்கள் எழுப்பும் தற்போதைய கேள்வி!
