×

மண் தரையில் மழையிலும், வெயிலிலும் கொட்டி வைத்திருக்கும் அவலம்; நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் அலட்சியம்: விவசாயிகள் கடும் அதிருப்தி

 

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லைக் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாகக் கூறி, விவசாய அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடி முடிந்து நெல் அறுவடை நடந்து வருகிறது. விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யத் தமிழக அரசு மாவட்டம் முழுவதும் 10 கொள்முதல் நிலையங்களைத் திறந்துள்ள போதிலும், அங்குள்ள வேளாண்மை, நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

கடந்த 3 வாரங்களாக நெல்லைக் கொண்டு வரும் விவசாயிகளிடம், அரசாணையில் இல்லாத ஆவணங்களைக் கேட்டு அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். போதிய ஈரப்பதம் இருந்தும், ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகப் பொய் கூறுவது, போதிய பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் இல்லை எனப் பொய்யான காரணங்களைக் கூறி கொள்முதலைத் தட்டிக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிகாரிகளின் அலைக்கழிப்பால், கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் சாலைகளிலும், மண்தறைகளிலும், காடுகளிலும் திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ளன.

தார்ப்பாய் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், மழையில் நனைந்து நெல் முளைவிடத் தொடங்கியுள்ளதுடன், விலங்குகளால் சேதமடைந்தும் வருகிறது. செண்பகராமன்புதூர் தென்னை மதிப்புக்கூட்டு வாரிய வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகள், ‘அவசரம் என்றால் தனியார் ஆலைகளுக்குக் கொண்டு செல்லுங்கள், நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்’ என வெளிப்படையாகவே தனியார் ஆலைகளுக்கு ஆதரவாகப் பேசுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் இன்னும் கிடங்குகளில் இருந்து அப்புறப்படுத்தப்படாததால் புதிய நெல்லை வைக்க இடமில்லாத அவலமும் நீடிக்கிறது. குமரி மாவட்ட பாசனத் துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தாணுபிள்ளை, முருகேசபிள்ளை, அருள், செண்பக சேகரப்பிள்ளை மற்றும் மீன்வளத் துறை முன்னாள் தலைவர் சகாயம் உள்ளிட்டோர் செண்பகராமன்புதூர் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் தங்களது நிலையை விவரித்தனர்.

இந்தநிலையில் நெல் கொள்முதலில் நடைபெறும் குளறுபடிகளை உடனடியாகக் களைந்து, அனைத்து நெல்லையும் உடனே கொள்முதல் செய்ய வேண்டும். தனியார் முதலாளிகளுடன் கூட்டு சேர்ந்து விவசாயிகளை வஞ்சிக்கும் ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி விரைவில் நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பு விவசாயிகளைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் எனவும் பாசனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Nagarko ,Kanyakumari district ,
× RELATED சதுரகிரி கோயிலுக்கு செல்லும்...