- பங்குனி மாதம் அமாவாசை
- Chathuragiri
- வத்திராயிருபு
- சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்
- மேற்குத்தொடர்ச்சி
- விருதுநகர் மாவட்டம்…
வத்திராயிருப்பு: பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள, சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படும் இக்கோயிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பவுர்ணமி, அமாவாசை மற்றம் விஷேச நாட்களில் இக்கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இதன்படி, பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே தாணிப்பாறை அடிவார பகுதியில் குவிந்தனர். வனத்துறையினர் சார்பில் காலை 6 மணி முதல் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும், மாலை 4 மணிக்குள் அனைவரும் மலையில் இருந்து இறங்கி விட வேண்டும் எனவும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
