×

நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடால் படப்பிடிப்புகள் பாதிப்பு: பல கோடி ரூபாய் முடக்கம்

சென்னை: நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடால் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல கோடி ரூபாய் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவில் கடுமையான காஸ் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்துள்ளது. பல இடங்களில் காஸ் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பல துறைகள் காஸ் தட்டுப்பாடால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓட்டல்கள் நாடு முழுவதும் மூடப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இந்த பாதிப்பு, சினிமா துறையையும் விட்டு வைக்கவில்லை.

சினிமா துறையில் ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை தொடர்ந்து ஷெட்யூல் போடுவார்கள். ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு சென்றோ, அல்லது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு சென்றோ படப்பிடிப்புகளை நடத்துவார்கள். ஒரு படப்பிடிப்புக்கு நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள், தொழிலாளர்கள் என 100லிருந்து 150 பேர் வரை வருவார்கள். அவர்களுக்கான சாப்பாடுக்கு கேட்டரிங் நிறுவனம் ஒன்றை புக் செய்திருப்பார்கள். சில பெரிய படங்களில் 200 முதல் 250 பேர் வரையும் கூட பணியில் இருப்பார்கள். அத்தனை பேருக்கும் காலை, மதியம், இரவு சாப்பாடு செய்ய வேண்டும்.

பகல், மதியம், மாலையில் டீ, காபி, ஸ்நாக்ஸ் தயாரிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு படப்பிடிப்பு தளத்திலும் 5 முதல் 6 சிலிண்டர்கள் வரை பயன்படுத்துவார்கள். நாடு முழுவதுமே 150க்கு மேற்பட்ட பல மொழிப் படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இதில் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் மட்டுமே 34 இருக்கும். இதில் பெரும்பாலான படப்பிடிப்புகள் சிலிண்டர்கள் கிடைக்காததால் பாதியில் நிறுத்தப்படும் சூழல் நிலவி வருகிறது. மற்ற மாநிலங்களிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் சுமார் 18 திரைப்படங்களின் ஷெட்யூல் பாதிக்கப்படும் என கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பு தடைபட்டால் மலையாள தயாரிப்பாளர்களுக்கு ஒருநாளைக்கு தலா 5 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சங்கத்தின் தலைவர் பி. ராகேஷ் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள எல்.பி.ஜி சிலிண்டர் கையிருப்பு அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும், அதன் பிறகு படப்பிடிப்பைத் தொடர்வது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார். ‘தற்போது நாடு முழுவதும் படப்பிடிப்புகள் பாதிப்பால் பல கோடிகள் முடங்கும் நிலை உண்டாகியுள்ளது. உடனடியாக ஒன்றிய அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மேலும் பல கோடிகள் நஷ்டம் ஏற்படும்’ என இந்திய திரைப்பட சம்மேளனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,America ,Iran ,Israel ,India ,
× RELATED அரசுப் பேருந்தின் மீது கண்டெய்னர்...