சிதம்பரம், மார்ச் 18: காரில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.3,40,000த்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அடுத்த மாதம் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிதம்பரம் பகுதி பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி செல்லும் புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஆனந்தி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி, காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பதும், இவர் உரிய ஆவணமின்றி காரில் ரூ.3,40,000 ரொக்கமாக எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வந்த பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஹரிதாஸிடம் ஒப்படைத்தனர்.
