×

அள்ள அள்ள குறையாத கிருஷ்ண கலய பிரசாதம்

எட்டெழுத்து பெருமாள் கோயில், திருநெல்வேலி மாவட்டம்.தாமிரபரணி கரையில் அருகன்குளம் என்னும் இடத்தில் தர்மபதி என்றழைக்கப்படும் ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோயிலும், சிறப்பு பெற்று விளங்குகிறது. இந்த கோயிலில்தான் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்களுக்குக் கிருஷ்ண கலய பிரசாதம் வழங்குகிறார்கள். மண் கலயத்தில் அழகான வர்ணம் தீட்டப்பட்டு அதில் இனிப்பு வகைகள் நிரப்பப்பட்டு கிருஷ்ணர் அருளுடன் பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த கலயத்தினை வீட்டில் வைத்து நாம் எதை நினைத்து வேண்டுகிறோமோ அவை நிறைவேறுகிறது. இதற்காக பக்தர்கள் கலயத்திற்காக முன்பதிவு செய்து வருகிறார்கள்.

1891 – ஆம் ஆண்டு ஆனி மாதம் 18ந்தேதி அருகன் குளத்தில் பிறந்தவர் மாயாண்டி சித்தர். சிறு வயது முதலே ஆன்மிகத்தில் மிகவும் நாட்டம் கொண்டவர். ஒரு காலகட்டத்தில் இவர் வல்லநாட்டு மலைக்கு சென்று தியானம் செய்தார். அதன் பின்னர் அவர் பல காலமாக வீடு திரும்பவில்லை. வல்ல நாட்டு மலையில் தியானம் இருந்த அவரின் கனவில் ராமர் தோன்றினார். அவர், ‘தான் ராம அவதாரத்தின்போது ஜடாயுக்கு தாமிரபரணி கரையில் திதி செய்த பின் வந்து அமர்ந்து ஓய்வு எடுத்த இடம் அருகன் குளத்தில் உள்ளது. அதில் நான் எட்டெழுத்து பெருமாளாக இருந்து அருள் வழங்க உள்ளேன். அதனால் எனக்கு அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டி வணங்குவீராக என உரைத்தார்.அதன்படி மாயாண்டி சித்தர் 28 ஆண்டுகளுக்கு பின் அருகன்குளம் வந்தார்.

அங்கு பெருமாளுக்கு கோயில் கட்டினார். ஓம் நாமோ நாராயணா என்ற 8 எழுத்து மந்திரத்தினை உச்சரிப்பதால் ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் எனப் பெருமாளுக்குப் பெயர் சூட்டினார். எட்டெழுத்து பெருமாள் ஸ்ரீராமர் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்தில் இங்கு பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.பெருமாளின் கணக்குகளை மாயாண்டி சித்தர் வாக்கு மூலமாக பகவான் பக்தர்களுக்கு உரைக்க ஆரம்பித்தார். இதனால் பக்தர்கள் கூட்டம் பெருகியது. பெருமான் அருள்பெற அருகன்குளம் வந்து குவிந்தனர். மாயாண்டி சித்தர் மழை பெய்யாத நேரத்தில் மழை பெய்து விவசாயிகளை மகிழ்விக்கச் செய்தார். அதே நேரத்தில் மழை பெய்து விவசாய நிலங்களை அழித்த வேளையில் இவர் மழையை நிறுத்தினார்.

கலியுகத்தில் ஸ்ரீ ராமநாம பாராயணமே மோட்சத்தை தரும் என்பதற்கு இணங்க மிகச் சிறந்த மந்திரமான ஸ்ரீ ராமஜெயம் என்ற கோஷம் அருகன் குளத்தில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த இடம் பகவானின் தர்ம பதியாகக் கொண்டாடப்படுகிறது.எத்தகைய பிரளயத்திலிருந்தும் என் தருமக்குடையின் கீழ்வரும் தர்ம மக்களைக் காப்பேன். தருமம் ஒன்றே நிலையானது. தர்மமே வெல்லும். தர்மம் மட்டுமே வெல்லும் என பகவான் மானிடம் மூலம் இறங்கி நாடிவரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் இடமாக தருமபதி விளங்கி வருகிறது. மாயாண்டி சித்தர் முக்தியடைந்த பிறகு அவர் வழித் தோன்றலாக சிதம்பரம் சுவாமிகள் பொறுப்பேற்றார். அதன்பின் மாயாண்டி சித்தரின் பெண் வழி வாரிசாக வரதராஜ பெருமாள் என்ற ராஜி சுவாமிகள் பொறுப்பேற்றார். பகவான் பக்தர்களின் தேவைகளை இவரின் வாயிலாக கணக்கு கூற ஆரம்பித்தார்.

அப்போது பழங்காலத்து ஓலைச் சுவடிகள் ஒன்றை மாயாண்டி சித்தர் பாதுகாத்து வந்ததாகவும், அதன்படி இந்த தர்மபதி உலகம் போற்றும் உன்னத நிலை அடைய அந்த ஓலைச்சுவடியில் குறிப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. ராஜி சுவாமிகள் ஓலைச் சுவடிகளை தேட ஆரம்பித்தார். சில காலங்களுக்குப்பின் அந்தப் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் கிடைத்தது. அதில் தர்மபதிக்கு விரைவில் ஒரு பெண் துறவி தர்ம அன்னையாக வருவார் என்றும் அவர் வரவுக்கு பின் மிகப் பெரிய கோசாலை உருவாகும் என்றும் தாமிரபரணி கரையில் பகவான் கல்வி அவதாரத்திற்கு முன்பாகவே உலகம் போற்றும் விதமாக இந்த இடத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு ஆலயம் உருவாகும் என்றும் குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டு இருந்தது.

அந்த ஓலைச்சுவடி கூற்றுக்கு இணங்க பெண் துறவியாக தர்ம அன்னையாக ராமலட்சுமி கோயிலுக்கு வந்தார். தருமபதி அருள்மிகு ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் தர்மஸ்தாபன அறக்கட்டளையை உருவாக்கப்பட்டது. கோயிலில் கோசாலை உருவாக்கப்பட்டது. கோசாலை உள்புறம் ஸ்ரீமகா கிருஷ்ணர் சந்நதி உருவாக்கப்பட்டது. தற்போது 900க்கு மேற்பட்ட பசுக்கள் இங்குப் பராமரிக்கப்படுகிறது.

இரண்டாயிரம் மக்கள் ஒரே நேரத்தில் அன்னதானம் உண்டு செல்லவும், தியான மண்டபம் அமைக்கவும், திருப்பணி சிறப்பாக நடந்து வருகிறது. தருமபதியில் அன்னதானம் நடைபெற பிட்சை பெற்று தரும மக்கள் உதவி வருகிறார்கள். இக்கோயிலில் அன்னதர்மம், திருமணி வெண் முத்திரை ஆகிய இரண்டு சிறப்புகள் உள்ளது. இக்கோயில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 10 ஆயிரம் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் அன்னதானம் உண்டு.

இக்கோயிலில், துலாபாரம் மூலம் தங்களது பாரங்களை இறக்கி வைக்கவும் முடியும். ஆண்டு தோறும் திருவிழா காணும் கோயில் இது. இக்கோயிலில்தான் கோசாலையின் நடுவில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ மகாவிஷ்ணுவை காணலாம்.இந்த கோயில் நடை காலை 6:00 முதல் 10:00 வரை மாலை 5:00 முதல் 8:00 மணி வரைகோயிலுக்குச் செல்ல நெல்லை சந்திப்பில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆட்டோ மற்றும் மினி பேருந்து வசதி உண்டு.

Tags : Krishna Kalaya Prasadam ,Ettazhethu Perumal Temple ,Tirunelveli District ,Sri Ettazhethu Perumal Temple ,Dharmapathi ,Arugankulam ,Thamirabarani ,Krishna Jayanti ,
× RELATED நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்…