×

அரை நிமிடத்தில் போரை முடிப்பேன்…

பஞ்ச பாண்டவர்களில், பீமனுக்கும், இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கடோத்கஜனுக்கும், மௌர்வி, (மூரா என்கிற ஒரு அசுரனின் மகள்) என்பவளைத் திருமணம் செய்துகொண்டான். இவர்களின் மகனாகப் பிறந்தவன் பர்பரீகன். பர்பரீகனுக்கு போர்க்கலையையும், வில்வித்தையையும் கற்றுக்கொடுத்ததில் மௌர்வியின் பங்கு மிகப்பெரியது.

“எப்போதும் தோற்றுப்போகும் பக்கம் நின்று போராடு’’ என்ற முக்கியமான அறிவுரையை பர்பரீகனுக்கு வழங்கினாள். பர்பரீகன் சிறந்த சிவபக்தனாக விளங்கினான். சிவபெருமானைக் குறித்து கடுமையான தவத்தில் ஈடுபட்டான். அவன் தவத்தை மெச்சிய சிவன், பர்பரீகனுக்கு மூன்று அம்புகளை வரமாகக் கொடுத்து ஆசிர்வதித்தார்.

* முதல் அம்பு, தான் அழிக்க நினைக்கும் இலக்குகளை முதலில் குறியிட்டுவிடும்.
* இரண்டாவது அம்பு, தான் காப்பாற்ற நினைக்கும் இலக்குகளை குறியிட்டு ஒதுக்கிக் காப்பாற்றிவிடும்.
* மூன்றாவது அம்பு, அழிக்க குறியிட்ட இலக்குகளை அழித்துவிடும்.

மூன்று அம்புகளும் தத்தம் பணிகளைச் செய்துவிட்டு பர்பரீகனிடமே திரும்பிவிடும். இது தவிர அக்னி பகவான், மூவுலகையும் வெல்லக் கூடிய வில் ஒன்றை பர்பரீகனுக்கு பரிசளித்திருந்தார். இதன் காரணமாக, பர்பரீகன் மிகவும் பலம் பொருந்தியவனாக விளங்கினான். பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் இடையே யுத்தம் துவங்க இருந்தது. கிருஷ்ணன் ஒவ்வொரு பராக்கிரமசாலியிடமும், போர் முடிய எத்தனை நாட்கள் ஆகும் என்று கேட்டறிந்து கொண்டிருந்த பொழுது, ஒவ்வொருவரும் நாட்கணக்கில் ஆகும் என்று கூறிவந்தனர். பர்பரீகனிடமும் அக்கேள்வி கேட்கப்பட்டது. அவனோ, அரை நிமிடத்தில் எதிரியின் படையை வீழ்த்தி, வென்றுவிடமுடியும் எனக்கூறி, சிவபெருமான் அவனுக்களித்த அம்புகளைப் பற்றிக் கூறினான்.

மேலும், போரைக் காண ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தான். இந்தப் பதிலால், கிருஷ்ணர் ஓர் முடிவிற்கு வந்தார். பின்பு பர்பரீகன் தன் தாயிடம் ஆசிபெற்று, தன் நீலக் குதிரை மீதேறி புறப்பட்டான். புறப்படும் முன்; “போரில் பலவீனமாக இருந்தவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை வெற்றி பெறச் செய்வேன்’’ என்று தாயிடம் சூளுரைத்துவிட்டு சென்றான். பர்பரீகனின் திறமையை அறிந்திருந்த கிருஷ்ணன், அவன் மனநிலையை நேரில் கண்டறிய விரும்பி, ஓர் அந்தணர் வேடம் பூண்டு அவனைக் காணச் சென்றார். வழியிலேயே அவனைப் பார்த்தும் விட்டார். அவனைத் தடுத்து நிறுத்தினார். ஓர் அந்தணர் தன்னை நிறுத்துவதை கண்டு, அவன் குதிரையை விட்டு இறங்கினான்.

“என்ன அந்தணரே.. என்னை ஏன் வழிமறித்தீர்?’’

“போர் உடையில் நீ வேகமாகச் செல்வதை கண்டு ஏன் இந்த பரபரப்பு என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மிகுதியில் நிறுத்தி விட்டேன்’’ என்றார் கிருஷ்ணன்.
“பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குருக்ஷேத்திரத்தில் போர் நடக்க உள்ளது அல்லவா? அதில் கலந்து கொள்ளப் போகிறேன்”
“யார் பக்கம் சேர்ந்து போரிடப் போகிறாய்?’’

“அங்கு போய் பார்ப்பேன் – யார் பக்கம் பலவீனமாக உள்ளதோ அவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை ஜெயிக்க வைப்பேன்” “நீ என்ன அவ்வளவு பெரிய பராக்கிரமசாலியா?”

“நீங்கள் வேண்டுமானால் என் பராக்கிரமத்தை சோதித்து பாருங்களேன்” என்றான் பர்பரீகன்.“இதோ இந்த அரசமரத்தில் உள்ள இலைகளை ஒரே அம்பால் உன்னால் கோர்க்க முடிந்தால் உன்னை பராக்கிரமசாலி என்று ஒப்புக்கொள்கிறேன்” என்றார் கிருஷ்ணன். பர்பரீகன், பார்க்காத பொழுது, மரத்தின் ஓர் இலையை மட்டும் பறித்து, அவனுக்குத் தெரியாமல் தன் காலடியில் போட்டுக் கொண்டார்.

“இதோ ஒரு நொடியில் செய்து விடுகிறேன். பாருங்கள்” என்று ஓர் மந்திரத்தை உச்சரித்து அம்பை எய்தான். அந்த அம்பு, மரத்தில் இருந்த இலைகளையெல்லாம் கோர்த்துக் கொண்டு, கடைசியாக கிருஷ்ணனின் பாதத்தை நோக்கிப் பாய்ந்தது.“இது என்ன விபரீதம்! அம்பு என் பாதத்தை துளைக்க முற்படுகிறதே” என்றார், கிருஷ்ணன்.

“அந்தணரே, உங்கள் காலடியில் ஓர் இலை இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் அம்பு பாதத்தை நோக்கி வந்திருக்கிறது. உடனே பாதத்தை எடுத்துவிடும்” என்றான்.கிருஷ்ணர் பாதத்தை எடுத்தவுடன், பர்பரீகனின் அம்பு அந்த ஒற்றை இலையையும் கோர்த்தது. பர்பரீகனின் பராக்கிரமத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணன், “பஞ்ச பாண்டவர்களை ஒளித்து வைத்தாலும் பர்பரீக்கனின் அம்பு தேடிக் கண்டு பிடித்துக் கொன்றுவிடும்’’ என்று உணர்ந்தார்.

“உன்னிடம் எனக்கு ஓர் யாசகம்
வேண்டுமே” என்றார் கிருஷ்ணன்.
“எது வேண்டுமானாலும் தயங்காமல் கேளும் அந்தணரே” என்றான்.

“உன் தலை வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார் கிருஷ்ணன். சற்றே திகைத்துவிட்ட பர்பரீகன்,“நீர் யார்? உண்மையைச் சொல்லும். நீங்கள் சாதாரண அந்தணரே அல்ல” என்றான். பகவான் கிருஷ்ணர் தன் சுய உருவத்தில் திவ்ய சொரூபனாக காட்சித் தந்தார்.“கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா’’ என்று பல்வேறு நாமங்களால் கிருஷ்ணனைத் துதித்தான். “பர்பரீகா, நீ மாவீரன். உன் தாயிடம் நீ மேற்கொண்ட பிரதிக்ஞையின் விளைவுகளை நீ அறியவில்லை’’

“நீ பாண்டவர்களுக்கு ஏழு அக்‌ரோஷினி படைகளும், கெளரவர்களுக்கு பதினொரு அக்‌ரோஷினி படைகளும் இருப்பதைப் பார்த்து பாண்டவர்கள் பக்கம் சேர்வாய். உன் பராக்கிரமத்தால் கெளரவ படை தோற்கத் துவங்கும். அது பலவீனமாவதை உணர்ந்து, உன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக நீ கெளரவர்கள் பக்கம் சேர்வாய். பாண்டவர்கள் தோற்கத்துவங்குவார்கள். முடிவில் பாண்டவ, கெளரவ சேனைகள் முற்றிலும் அழிந்து நீ மட்டுமே மிஞ்சுவாய். இது தர்மத்திற்கு நல்லதல்ல. ஆகவே நீ போரில் பங்கேற்கக்கூடாது. ஆகவே, தர்மத்தின் பொருட்டு நீ உயிர்த் தியாகம் செய்து விடு” என்றார், கிருஷ்ணன். பர்பரீகனும் இசைந்தான்.

அவன் தியாகத்தை மெச்சிய கிருஷ்ணன், ஒரு வரத்தை அளித்தார். அவன் விரும்பியது போல், மகாபாரதப் போர் முழுவதையும் பார்ப்பதற்கு உதவி புரிவதாகக் கூறினார். அவன் தலை சக்ராயுதத்தால் கொய்யப்பட்டது. பகவான் அவனுக்குக் கொடுத்த வரத்தினைக் காப்பாற்றினார். அவன் தலைக்கு மட்டும் உயிர் கொடுத்து, அதை உயரமான ஒரு குன்றின் மேலிருந்து முழு போரையும் காணும் வண்ணம் வைத்து அருளினார். அவரின் அருளால், பர்பரீகன் முழு போரையும் கண்டான்.

மகாபாரதத்தில், தர்மம் நிலைப்பதற்காக, அர்ஜூனன், உலூபி மகனான அரவானும், கடோத்கஜன், மௌர்வி மகனான பர்பரீகனும் தங்கள் உயிரையே தியாகம் செய்தது போற்றுதலுக்குரியது. ராஜஸ்தானில், பர்பரீகனை, “கதுஷ்யாம்ஜி’’ என்கிற பெயரால் போற்றி வணங்கி வருகிறார்கள்.

மாலதி சந்திரசேகரன்

 

Tags : Pancha Pandavas ,Kadodgajan ,Bhiman ,Idumbi ,Mourvi ,Moorah ,
× RELATED காரைக்கால் அம்மையாருக்கு முக்தியளித்த தலம்!