×

சரும நிறத்தை கொண்டு மதிப்பிடாதீர்கள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘தோலின் நிறம், பின்னணி அல்லது மதத்தைக் காரணம் காட்டி யாரும் இன்னொருவரை வெறுத்து பிறப்பதில்லை; வெறுப்பை கற்றுக்கொள்ளும் மனிதர்களால், அன்பையும் கற்றுக்கொள்ள முடியும்” என்பது நெல்சன் மண்டேலாவின் புகழ்பெற்ற கூற்று. சரும நிறத்தை காரணமாக வைத்து சமூகத்தால் பலர் நிராகரிக்கப்படுவதையும் நிறத்திற்கு அப்பால் பலரும் தங்கள் திறமைகளை நிரூபிக்க போராடுவதையும் இன்றளவும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பிறர் சொல்வதை ஏற்றுக்கொண்டு அப்படியே தங்களை முடக்கிப் போட்டவர்களும் உண்டு.

இது போன்ற தடைகளை கடந்து வந்தவர் ஜோதிமலர். சினிமா கனவுகளுடன் ராமநாதபுரத்தின் முதுகுளத்தூர் என்கிற சிறிய கிராமத்திலிருந்து புறப்பட்டு, சர்வதேச அளவில் ‘கலாச்சார தூதர்’ (Cultural Ambassador) பட்டத்தை பெற்றிருக்கும் ஜோதிமலரின் பயணம் தாழ்வு மனப்பான்மையுடன் தங்களை ஒடுக்கி வைத்திருக்கும் மனிதர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கக்கூடியது. நிறம் மற்றும் உருவக் கேலிகளைத் தாண்டி, ஒரு பெண் உலக அரங்கில் சாதிக்க முடியும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

“சிறு வயதிலிருந்தே சினிமாவில் தோன்ற வேண்டும் என்பதுதான் என் ஆசை. தோலின் நிறத்தை தாழ்வாக கருதி என் மீது விழுந்த சமூகத்தின் பார்வையால் எனக்குள் தாழ்வுமனப்பான்மை எழுந்தது. என்னை சுற்றி இருப்பவர்களே என் நிறத்தை பார்த்து கேலி செய்தார்கள். கிராமப்புறங்களில் பாசமாக கொஞ்சுவது போல தோன்றும். ஆனால், அதுதான் நம்மை ஆழமாக காயப்படுத்தும். ‘நல்லா மூக்கும் முழியுமா லட்சணமா இருக்க, ஆனால், கருப்பா இருக்க’ என்பார்கள். நான் அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டேன். நான் அழகாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லி நகர்ந்துவிடுவேன். ஆனால், மனதளவில் அவர்களின் வார்த்தை என்னை பாதித்தது.

நான் வளர்ந்ததும் ஏதாவது செய்து வெளிர் நிறமாக மாறிவிடலாம் என்ற சிந்தனை எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அப்போது எனக்கு மாடலிங் துறை பற்றி தெரியாது. பள்ளிப் படிப்பை முடித்ததும் பொறியியல் படிக்க சென்னைக்கு வந்தேன். சினிமாவிலும் வாய்ப்பு தேடலாம் என்ற எண்ணம் இருந்தது. நான் ஒரு நடிகை ஆக வேண்டும். ஆனால், எப்படி என்று தெரியாது. ஹாஸ்டலில் என் தோழிகளிடம் சொன்ன போது மாடலிங் துறை பற்றி சொன்னார்கள். அதன்பிறகு மாடலிங் குறித்த வீடியோக்களை ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினேன்.

பிரபல மாடல்கள் எவ்வாறு ராம்ப் வாக் செய்கிறார்கள், உடலையும் அழகையும் பராமரிக்கிறார்கள் என்று பின்பற்ற ஆரம்பித்தேன். இதே போல நானும் ஒரு நாள் ராம்ப் வாக் செய்யணும் என்று நினைப்பேன். அதற்கு முறையான பயிற்சி எடுப்பதற்காக ஒரு மாடலிங் பயிற்சி மையத்தில் சேருவதற்காக சென்றபோது, அங்கிருந்தவர்கள் என் தோற்றத்தை பார்த்து சிரித்தார்கள். நான் உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டேன். மாடலிங் பயிற்சியை தொடங்கவே முதலில் நம் அழகை மெருகேற்றிக்கொள்ள வேண்டும் என்பதை சிந்தித்தேன். கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்தினேன்” என்றவர் மேலும் தொடர்ந்ததில்…

“படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்றேன். அப்போதும் மாடலிங் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. தோழி ஒருவர் சீரியலில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருந்தார். அவருடன் நானும் படப்பிடிப்பிற்கு நேரம் கிடைக்கும் போது செல்வேன். ஆனால், அங்கு ஜூனியர் ஆர்டிஸ்ட் என்பதால், அவர்கள் நடத்தப்பட்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை. அந்தத் தருணம் நடிப்பு வேண்டாம் என்று முடிவு செய்து மாடலிங் செய்ய என்னை தயார் படுத்திக்கொண்டேன்.

என் விருப்பத்தை வீட்டில் சொல்ல சற்று தயக்கமாக இருந்தது. சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெரிய நகரங்களில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தால் மட்டுமே என்னால் பயிற்சி எடுக்க முடியும் என்பதால் அதற்காக முயன்றேன். பெங்களூருவில் ஒரு MNC நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்குள்ள மாடலிங் பயிற்சி மையத்தை அணுகினேன். என்னை எப்படி நடத்துவார்கள் என்ற பயத்துடன்தான் சென்றேன். ஆனால், அங்கிருந்தவர்கள் என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார்கள்.

என் சருமத்தின் நிறம் அழகாக இருப்பதாக சொன்னார்கள். என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பினார்கள். அந்தத் தருணம் இதுதான் சரியான இடம் என்று தோன்றியது. அங்கேயே மாடலிங் மற்றும் நடிப்புக்கலை இரண்டையும் கற்றுக்கொண்டேன். 2024ல் கர்நாடகா அளவில் நடைபெற்ற அழகுப் போட்டியில் கலந்து கொண்டபோது எனக்கு ‘மிஸ் ஃபேஷன்’ ஐகான் எனும் பட்டம் கிடைத்தது. அது எனக்குள் ஒரு தன்னம்பிக்கை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தேசிய அளவிலான நிகழ்வுகளுக்கு தயாராக சொல்லி என் பயிற்சி மையத்தில் கூறினார்கள். அதற்கான பயிற்சியும் மேற்கொண்டேன். பொதுவாக நம் தமிழ்நாட்டு பாரம்பரியம் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.

2024ல் நடந்த ‘மிஸ் ஹெரிடேஜ்’ அழகுப் போட்டியை பார்த்து எனக்கும் அதில் பங்கேற்கும் ஆர்வம் ஏற்பட்டது. சூப்பர் மாடல்ஸ் எல்லாம் 5.9 முதல் 6 அடி வரை உயரம் இருப்பார்கள். நான் அவ்வளவு உயரம் இல்லை என்பதால் சற்று தயக்கமாக இருந்தது. பின்னர் அந்த அழகுப் போட்டியில் பங்கேற்ற ஒருவரை அணுகி, அதற்கான பயிற்சிகள் குறித்து கேட்டறிந்து கொண்டேன். அதற்கான நிகழ்வில் பங்கேற்க என்னை தயார்படுத்திக் கொள்ளவும் செய்தேன். தேர்வும் ஆனேன்” எனும் ஜோதி மலர், தன்னை மேலும் மெருகேற்றி திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“2025ம் ஆண்டு தேசிய அளவிலான ‘மிஸ் ஹெரிடேஜ் இந்தியா 2025’ நிகழ்வு பூனேவில் நடைபெற்றது. அதில் கேள்வி பதில் சுற்றில் என்னுடைய பயணம் குறித்து கேட்டனர். அதற்கு நான் பொதுவாக எல்லோருக்கும் தங்கள் மாநிலத்தின் மீதான பெருமை அதிகமாகவே இருக்கும். ஆனால், நான் பிற மாநிலங்களுக்கு பயணித்த போது, ஒரு தேசத்தில் எல்லா மாநிலமும், உலகில் எல்லா நாடுகளும் ஒரே கூரையின் கீழ் இருப்பது போன்றதுதான் என்று புரிந்தது.

ஒவ்வொரு மாநிலம் மற்றும் நாட்டின் மொழி, பாரம்பரியம் அவற்றின் சிறப்பை பாராட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் பதிலளித்தேன். நடுவர்கள் அனைவருக்கும் அது பிடித்துப் போனதால், தாய்லாந்தில் சர்வதேச அளவில் நடைபெறும் ‘மிஸ் டூரிசம் அம்பாசிடர் இந்தியா 2025’ நிகழ்வுக்கு தேர்வானேன்.

அங்கு ஒவ்வொரு பங்கேற்பாளரும் நேரிடையாக அவர்களின் பெயர்களை சொல்லாமல், நாட்டின் பெயரை வைத்துதான் அழைப்பார்கள், அதேபோல என்னை மிஸ் இந்தியா என்று குறிப்பிட்டு அழைத்துதான் பேசுவார்கள். அந்தத் தருணம் மிகவும் பெருமையாக இருக்கும். இந்தப் போட்டியில் டைட்டில் வின்னராக ஒருவரும், கலாச்சார தூதராக ஒருவரும் தேர்வு செய்யப்படுவார்கள். மங்கோலியா நாட்டிற்கு கிரவுன் கிடைத்தது. நான் இந்தியாவை பிரதி நிதித்துவப்படுத்திய போது, ‘கலாச்சார தூதர்’ பட்டம் எனக்கு வழங்கப்பட்டது.

கிரவுன் ஜெயிப்பதை விட, கலாச்சார தூதர் பட்டம் கிடைத்ததில் உண்மையில் நான் பெருமையாக உணர்ந்தேன். மாடலிங் துறையில் நுழைந்ததும் எனக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தை பாராட்டி என் வீட்டிலும், எங்க ஊரிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. என் நிறத்தை வைத்து கேலி செய்தவர்கள் எனக்கு வாழ்த்து சொன்னார்கள்” என்றவர் சமூகத்தில் நிலவும் நிற வேற்றுமை சார்ந்த பிரச்னைகள் குறித்து பகிர்ந்தார்.

“சினிமாவில் கூட கதாநாயகிகளை நேர்த்தியான தோற்றத்தில், எடுப்பான உடல் அமைப்பு, வெளிர் நிறத்தில்தான் காண்பிக்கிறார்கள். சிறுவயதில் நான்கூட அதையெல்லாம் பார்த்து இதுதான் அழகென்று நினைத்தேன். வளர்ந்த பிறகு இவர்களை போலவே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால், அது எனக்குள் ஒரு தாழ்வுமனப்பான்மையை உருவாக்கியது. சினிமாவை மட்டுமே சொல்ல முடியாது, அதை பார்க்கக்கூடிய மக்களும் அப்படியே ஏற்றுக்கொண்டு சமூகத்தின் மீது அதே பார்வையை செலுத்துகின்றனர். அழகு, நேர்த்தியான உடலமைப்பு குறித்தான புரிதல் ஏற்பட்டதும் என் மீதான சுய காதல் அதிகரித்தது.

ஒவ்வொரு பெண்ணும் முதலில் தங்களை காதலிக்க வேண்டும். சுற்றி இருப்பவர்கள் எதையாவது சொல்லி இதுதான் நாம் என நம்மையே நம்ப வைக்க முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்ட மனிதர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. எந்தவொரு மனிதனையும் அவர்களின் சரும நிறத்தை கொண்டு மதிப்பிடக்கூடாது. ஒரு நபரின் குணாதிசயங்கள், மதிப்புகள், வலிமை, கருணை மற்றும் மற்றவர்களை நடத்தும் விதம் போன்றவைதான் உண்மையிலேயே அந்நபரை வரையறுக்கும். மரியாதை என்பது தோற்றம் அல்ல… அவரின் பின்னணியை மட்டுமே வைத்து தீர்மானிக்கப்படாமல், நேர்மை மற்றும் இரக்கத்தின் மூலம் அது பெறப்பட வேண்டும். இறுதியில், மனிதநேயம் மட்டுமே நமது உண்மையான அடையாளம்” என்றார் ஜோதிமலர்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

Tags : Nelson Mandela ,
× RELATED சமூக அக்கறையுடன் செயல்படும் பெண் தொழில்முனைவோர்!