×

எரிபொருள் தட்டுப்பாட்டால் போராட்டம்: கியூபாவில் அரசு அலுவலகங்கள் தீவைப்பு

மோரோன்: கியூபாவில் நிலவும் கடும் மின்வெட்டு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்துள்ளது. கியூபா நாட்டில் கடந்த 9ம் தேதியன்று ஹவானா பல்கலைக்கழக மாணவர்கள், மின்சாரம் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாததால் வகுப்புகள் பாதிக்கப்படுவதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் ஹவானாவின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில், மோரோன் நகரில் 13ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு, உணவுத் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டுக்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கிய பேரணி, நேற்று அதிகாலையில் பெரும் கலவரமாக மாறியது. ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு கற்களை வீசித் தாக்கினர். பின்னர் கட்டிடத்திற்குள் புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் லேப்டாப் போன்றவற்றை தெருவில் வீசி தீயிட்டு கொளுத்தினர். இந்த வன்முறை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெனிசுலாவில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கியூபாவுக்கு வந்து கொண்டிருந்த எரிபொருள் விநியோகம் முற்றிலும் நின்று போனது. இதனால் அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் முடங்கி, தினமும் 20 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிக்கிறது. இதற்கிடையே எரிபொருள் தடையை நீக்குவது தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்துடன் கியூபா அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டு அதிபர் மிக்வெல் டயஸ்-கானெல் தெரிவித்துள்ளார்.

Tags : Cuba ,Morón ,University of Havana ,
× RELATED My Free Cams, Only Fans தளங்களின் உரிமையாளர் உயிரிழப்பு