×

கொரோனாவால் ஜிடிபி சரிந்த நிலையிலும் விவசாய உற்பத்தி மட்டும் 4 சதவீதம் அதிகரிப்பு

கோவை,பிப்.11:  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் சார்பில் இந்திய வேளாண் பொருளாதார சங்கத்தின் 80வது ஆண்டு ஆராய்ச்சி மாநாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. இதில் நபார்டு வங்கித் தலைவர் சிந்தாலா தலைமை தங்கினார். மேலும், ஆராய்ச்சி மாநாட்டின் நோக்கம், மாநாட்டில் விவாதிக்கப்படக்கூடிய கருத்துக்கள் மற்றும் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் குறித்து  பேசினார்.இதை தொடர்ந்து நபார்டு வங்கித் தலைவர் சிந்தாலா நிருபர்களிடம் பேசுகையில்,  ‘கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ஜிடிபி சரிந்த நிலையில் விவசாய உற்பத்தி மட்டும் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நபார்டு வங்கி சார்பில் நடப்பு நிதியாண்டில் விவசாயத் துறைக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 12 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் 2021- 2022-ம் நிதியாண்டில் 16.5 லட்சம் கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் ரூ.6 ஆயிரம் கோடி விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது.  கடந்த 8 ஆண்டுகளில் நபார்டு வங்கி மூலம் நாடு முழுவதும் 4 ஆயிரத்து 600 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த 4 ஆண்டுகளில் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் 14 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் உள்ள நிலையில் 1 லட்சம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.

 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்குவதன் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்கின்றனர். இதனால் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இடைத்தரகர்களின் தலையீடு குறைந்துள்ளதால் உற்பத்தி பொருள்களுக்கு உரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. தனியாரிடம் கடன் பெற வேண்டிய தேவையும் குறைகிறது’ என கூறினார். இந்நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநர் அசோக், இந்திய வேளாண் பொருளாதார சங்க செயலாளரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆராய்ச்சி இயக்குநருமான தாதீட்ச், இந்திய வேளாண் பொருளாதார சங்கத் தலைவர் அபிஜித் சென், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Corona ,
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!