×

மீனத்தில் சூரியன்..! மனநிறைவைத் தருவாரா?

இதுவரை, சனி பகவானின் ஆட்சி வீடான கும்ப ராசியில் சஞ்சரித்து வந்த சூரியன், குரு பகவானின் ராசியும், சூரியனுக்கு நட்பு வீடானதுமான மீன ராசிக்கு மாறி, அங்கு சஞ்சரிக்கும் சுமார் ஒரு மாதக் காலமே ‘‘பங்குனி” மாதம் எனவும், ‘‘மீன மாதம்” எனவும் போற்றப்படுகிறது.தேவ குருவான, பிரஹஸ்பதியின் ஆட்சி வீடான மீனம், சனி பகவானுக்கு நட்பு ராசியாகும். ‘‘சாயா” கிரகங்கள் எனவும், ‘‘நிழல்” கிரகங்கள் எனவும் விவரிக்கப்படும் ராகு – கேது முறையே, கும்ப ராசியிலும், சிம்மத்திலும் சஞ்சரிக்கின்றனர்!இத்தகைய கிரக நிலைகளின்போதுதான், பங்குனி மாதம் பிறக்கிறது!!மேஷ ராசிக்கு, மிதுனம் ‘‘திருதீய” ஸ்தானமாகிறது. அதாவது, ராசிக்கு மூன்றாம் இடம் என்பதே இதன் பொருள்.

ராசிக்கு, ‘‘திருதீய” ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும்போது, சக்திக்குமீறிய செலவுகள் ஏற்படும் எனக் கூறுகின்றன, புராதன ஜோதிட நூல்கள்.ராசிக்கு, மூன்றாம் இடத்தில் குருபகவான் வலம் வரும்போது, ‘‘ஜீவ நதியும் வற்றும்…!” எனக் கூறுகின்றது, ‘‘பூர்வ பாராசர்யம்” எனும் பண்டைய ஜோதிடக் கிரந்தம். இது மகரிஷி பராசர்யரின் அதியற்புத படைப்பாகும்.பிற்காலத்தில், படைக்கப்பட்ட ஏராளமான ஜோதிடக் கிரந்தங்களுக்கு இந்நூலே ஆதார கிரந்தமாகக் கொண்டு எழுதப்பட்டன.குரு கிரகத்தின் சஞ்சார நிலைகள் பற்றியும், அவற்றின் பலன்கள் பற்றியும் இந்நூலில் விவரமாக விளக்கப்பட்டுள்ளன. இதுபற்றி விளக்குவதற்குமுன், இம்மாதத்தில் நிகழவிருக்கும் முக்கியமான நிகழ்ச்சிகளைப் பற்றி சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

இம்மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்!

பங்குனி 1 (15-3-2026) : ஞாயிற்றுக்கிழமை – பங்குனி மாதப் பிறப்பு. ஷடசீதி புண்ணியக் காலம். சர்வ ஏகாதசி. பித்ருக்களைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம். மேலும், இன்றைய தினம் ‘‘சம்பத் கௌரி விரதம்”. இவ்விரதத்தைக் கைக்கொள்பவருக்கு, அஷ்ட ஐஸ்வர்யங்களைப் பெற்று வைய்யத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்களாகவும், மணமான பெண்கள் நித்திய சுமங்கலிகளாகவும் பரிமளிப்பர் என்பது உறுதி.
பங்குனி 2 (16-3-2026) : திங்கட்கிழமை – பிரதோஷம். மாலையில், சாம்ப சிவமூர்த்தியை ரிஷபாரூடராக தரிசனம் செய்வது – ஆலய தரிசனம் சர்வ பாபங்களைப் போக்கும்.
பங்குனி 3 (17-3-2026) : செவ்வாய்க்கிழமை மாத சிவராத்திரி விரதங்களுள் மிக முக்கியமானது, ஏகாதசி விரதம். அவ்விரதத்திற்கு அடுத்தபடியாகக் கூறப்படுவது மாத சிவராத்திரி மட்டுமே! அன்றைய தினம் உபவாசமிருந்து, மாலை வேளையில் இரண்டாவது முறையாக ஸ்நானம் செய்துவிட்டு அவரவர்க்குரிய நெற்றித் திலகம் இட்டுக் கொண்டு, ருத்ராக்ஷங்களை அணிந்து கொண்டு, சிவபெருமானுக்கு, பால், தயிர், பழம், தேன், கரும்புச் சாறு, தேங்காய்த் துருவல், மாம்பழம், பேரிச்சம்பழம், பலாப்பழம் கலந்த பஞ்சாமிருத அபிஷேகம் செய்திடல் வேண்டும். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பார்க்கு சகல விருப்பங்களையும் நிறைவேற்றி, இன்னருள் புரிவார், இறைவன்.
பங்குனி 4 (18-3-2026) : புதன்கிழமை – சர்வ அமாவாசை. குதபகாலம் எனப்படுகின்ற (பகல் 1.15க்குமேல் 3.00 மணிக்குள்ளான நேரம்) இவ்வேளையில், தர்ப்பணம் செய்து, பசு மாட்டிற்கு அகத்திக் கீரை கொடுத்து பித்ருக்களைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம். இன்றைய தினத்தில், பூண்டு, வெங்காயம், வெள்ளை கத்தரிக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், துவரம் பருப்பு, சேமியா, ஜவ்வரிசி, வெற்றிலை-பாக்கு, மசாலாப் பொருட்கள், மது, மாமிசங்களை விலக்கிடல் வேண்டும்.
பங்குனி 5 (19-3-2026)-வியாழக்கிழமையிலிருந்து, பங்குனி 13 (27-3-2026) -ந்தேதி வெள்ளிக்கிழமை வரை: வசந்த நவராத்திரி. இந்நாள் மாலை நேரத்தில், அம்பாளைப் பூஜித்து வந்தால், அம்பாளின் பரிபூரண கடாட்சத்திற்குப் பாத்திரராவீர்கள். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கக்கூடிய வீரம், செல்வம் அனைத்தையும் ஒருங்கே பெற்ற ஸத் புத்திரர்களையும் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ வகை செய்திடுவாள் அம்பிகை.
பங்குனி 7 (21-3-2026) : சனிக்கிழமை ‘‘சௌபாக்கிய கௌரி விரதம்” இந்நாளில் கலசத்தில் அம்பாளை ஆவாஹனம் செய்து, மாக்கோலமிட்டு அம்பாள் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, நெய் விளக்கேற்றி வைத்து, 9 முறை வலம் வந்து நமஸ்கரித்து, லலிதா சகஸ்ரநாமம், தேவ பாகவதம், துர்க்கா ஸப்தஸதீ, சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி -இவற்றில் எது முடிகிறதோ அவற்றைப் படித்தோ அல்லது கேட்டோமையானால், சகல சௌபாக்கியங்களையும் தந்தருள்வாள் அந்த லோகமாதா!

பங்குனி 8 (22-3-2026) : ஞாயிற்றுக்கிழமை ‘‘தாரா தேவியின் ஜெயந்தி. இவ்வடிவமானது, திருமாலின் ஸ்ரீவாமன அவதாரத்திற்கு இணையான பராக்கிரம் உடையதாக அமையப் பெற்றிருப்பதும், ‘‘தஸமஹா வித்யா நாம மந்திர”த்தில் சிலாகித்துக் கூறியுள்ளபடி, ஆதி பராசக்தியின் தசாவதார திருமுகத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீமந் நாராயணனின் தசாவதாரத்திற்கு இணையானதாகவும், ஒருவரின் ஜனன ஜாதகத்தில், லக்கினம், சூரிய – சந்திர உள்ளிட்ட நவகிரங்களின் தோஷங்களைப் பரிபூரணமாகக் களையக்கூடியதாக அமைந்துள்ள அம்பாள் – ஆதி பராசக்தியைப் போற்றி, கொண்டாடப்படுகிறார். ஈசனின் இடப்பக்கத்தில் அமர்ந்த உமையவளை – இந்நாளை, அம்பாளின் ஜெயந்தியாகக் (அவதார தினமாகக்) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ‘‘ஸ்ரீதேவி பாகவதம்” படித்தாலும், கேட்டாலும், நினைத்தாலுங்கூட, மகா புண்ணிய பலனைப் பெறுவீர்கள். முடிந்தவர்கள், இன்றைய தினத்தில் அம்பாளின் கோயிலுக்குச் சென்று, மூன்று மண் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, 9 முறை வலம் வந்து, தரிசித்துவிட்டு வந்தாலே போதும். முக்கியமாக இவ்வவதாரம், ஜாதகத்தில் குரு பகவானின் தோஷத்தைப் போக்குபவளாகவும், அவரின் பரிபூரண கடாட்சத்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையப்பெற்றுள்ளது. ஆகவே, இந்நன்னாளைத் தவறவிடாமல், அனைவரும் திருக்கோயிலுக்குச் சென்று அம்பாளை தரிசிக்க வேண்டும். மேலும், இன்று ஸ்ரீவிநாயகப் பெருமானுக்்கு உகந்த மாத சதுர்த்தி – காலையில் விரதமிருந்து, மதியத்தில் சகல காரிய சித்தியை அளித்தருளும் ஸ்ரீசித்தி-புத்தி விநாயகப் பெருமானை அருகம்புற்களைக் கொண்டு அர்ச்சித்து, தேங்காய், மோதகங்கள், பழவகைகளைக் கொண்டு நைவேத்தியம் செய்வித்து, உணவருந்துவதற்கு முன்பாக ஒரு பிரம்மச்சாரிக்கு உணவளித்து, தன்னால் இயன்ற தட்சிணையையும் கொடுத்து வணங்கி, தான் உண்ணல் வேண்டும். இவ்வண்ணம் விரதமிருப்பார்க்கு சகல காரிய சித்தியுண்டாகும். ஒவ்வொரு மாதமும் இவ்விரதத்தைக் கண்டிப்பாக செய்திடல் நலம் பயக்கும். முக்கியமாக, இன்றயை தினத்தில் சந்திர தரிசனம் செய்திடல் கூடாது.

பங்குனி 9 (23-3-2026) : திங்கட்கிழமை ஸ்ரீலட்சுமி பஞ்சமி – இந்நன்னாளில் கலசம் வைத்து பூஜிக்க இயலாதவர்கள், அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று, மூன்று மண் அகல் விளக்குகளில் பசு நெய் தீபமேற்றி வழிபட்டால், உங்கள் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும். முடிந்தவர்கள், அன்னதானம் செய்வித்தலும், ரதிதேவி – மன்மத பூஜை ெசய்வித்தல், மணமானவர்கள் மனமொத்த தம்பதியராய் இத்தரணியில் பரிமளிப்பர். இந்நாளில் லட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி அல்லது கேட்டு வந்தால சகல வித நன்மைகளும் உங்களை வந்தடையப்போவது திண்ணம். மேலும், இன்று கிருத்திகை விரதம். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் விரதமிருந்து, மாலை வேளையில் சூரிய அஸ்தமனமாகும் தருவாயில், வீட்டுப் பூஜையறையில் 9 மண் அகல் விளக்குகளில் நெய் தீபமேற்றி, கிழக்குத் திக்கில் ேதான்றும் கிருத்திகை நட்சத்திரத்தை தரிசித்தபிறகு, வள்ளி-தேவானை சமேத முருகப் பெருமானை வழிபட்டு உணவு உண்ணலாம். இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு, கார்த்திகைப் பெண்களால் முருகப்பெருமான் வளர்க்கப்பட்டது போல், அழகு மிகுந்த குழந்தைகளைத் தந்தருளி சகல ஐஸ்வர்யத்திற்கும் அதிபதியாக உயர்த்தித் தருவார் ஸ்ரீமுருகப் பெருமான் என்று கட்டியம் கூறுகிறது ஸ்கந்தபுராணம்.

பங்குனி 10 (24-3-2026) : செவ்வாய்க்கிழமை – சுக்லபட்ச சஷ்டி விரதம் – இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போர்க்கு, எவ்வாறு ஸ்ரீமுருகப் பெருமான் தேவர்களுடைய சேனாதிபத்தியத்தையும், சகல ஐஸ்வர்யங்களையும், புகழையும் அடைந்தரோ அதே போல், நாமும், நோய்-நொடிகளற்ற பல்லாண்டு வாழ்வும், சகல காரிய சித்தி அடையவும், புத்தி, தைரியம், ஆயுள் ஆரோக்கியம் அடைவோம் என்று ஸ்ரீபவிஷ்ய புராணம் அறுதியிட்டுக் கூறுகிறது.
பங்குனி 13 (27-3-2026) : வெள்ளிகிழமை – ஸ்ரீராம நவமி. இன்றைய தினத்தில் நிர்ஜலமாக (நீரைக் கூடாத பருகாத நிலை) உபவாசமிருந்து, பிராமணர்களுக்கு வேட்டி துண்டு தானம்
செய்வித்து,
”ஸ்ரீராம ராம ராமதேி
ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர ராம தத்துல்யம்
ராம நாம வராணேனே”
இம்மகா மந்திரத்தை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க சகலவித நற்பலன்களும் உங்களை வந்தடையும். முடிந்தவர்கள், அனைவருக்கும் நீர்மோர்-ஐ பருகக் கொடுக்கலாம்.
பங்குனி 15 (29-3-2026) : ஞாயிற்றுக்கிழமை – சர்வ ஏகாதசி. காமத ஏகாதசி விரதம்
பாபங்களைப் போக்கும்.மேலும், இன்று ஆதிசேஷனின் அவதாரமும், அட்டமா சித்துக்களை கைவரப் பெற்றவருமான ஸ்ரீபதஞ்சலி சித்த மகா புருஷரின் அவதார தினம்.
“உண்மையென்ற குண்டலியே பிராணவாயு
ஓங்கார பிண்டத்தி லுதித்த வான்மா
மென்மையென்ற வாகாசத் திருந்த வாறும்
மேலெழத்துங் கீழ்எழுத்து மானவாறும்
தன்மையென்ற விந்துவிலே நின்ற வாறும்
சாஸ்திர விதஞ் சாகரத்திற் சார்ந்தவாறும்
கன்மையென்ற சிங்கு வங்கில் நிறைந்த வாறும்
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே!!”
குண்டலீனி சக்தியையும், வாசியோகத்தினால் அடையக்கூடிய பலனையும், அதை எவ்விதம் செய்ய வேண்டும் என்பதை, மேலெழுந்தவாரியாகப் படித்தால் ஒரு பொருளும், ஆழ்ந்து-பொருளுணர்ந்து படித்தால் மட்டுமே இதன் மெய்ப்பொருளை உணர முடியும் வகையில் வாக்கியங்கள் அமைந்திருப்பதை யோகாப்்பியாசம் செய்பவர்களால் மட்டுமே அறிய முடியும்.அரவணையில் துயில் கொண்டிருந்த ஸ்ரீமந் நாராயணன், புன்முறுவல் பூக்க, அதைக் கண்ணுற்ற ஆதிசேஷன், அதற்கான காரணத்தைக் கேட்டார்.யோக நித்திரையில் இருந்த ஸ்ரீமந் நாராயணன், தான் சிவதாண்டவத்தைக் கண்டதாகக்கூறக் கேட்ட ஆதிசேஷன், தானும் அந்த அதியற்புதக் காட்சியைக் காண வேண்டுமெனக் கூற, பகவானும், தில்லைக்குச் சென்றால் காணலாம் என பதிலளித்தார்.

உடனே, ஆதிசேஷனும் தில்லைக்கு விரைந்தார். அங்கு கானகத்தில் பல்லாண்டுக்காலம் தங்கியிருந்து, தான் இயற்றிய ‘‘வியாகரண சூத்திரம்” எனும் நூலை, தம் சீடர்களுக்கு உபதேசிக்க திருவுள்ளம் கொண்டார்.
முற்பிறவியில், பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைய முற்பட்டபோது, தன்னுடைய மூச்சுக்காற்று பட்ட மாத்திரத்திலேயே அத்துனை அசுரர்களும் மடிந்து போனதை எண்ணி, தன்னுடைய சீடர்களுக்கும் அவ்வண்ணம் நேர்ந்துவிடக்கூடாது என சித்தத்தில் தீர்மானித்த அவர், தனக்கும் – தன்னுடைய சீடர்களுக்கும் இடையில் ஒரு கனமான திரைப் போட்டு மறைத்து, தான் கற்பிக்கும்போது யாரும் திரையைத் திறக்கக் கூடாதெனக் கட்டளையும் இட்டார்! தன்னுடைய ஆதிசேஷ உருவத்தையும் பிறர் காண முடியாதவாறு திரையின் மறுபக்கத்திலிருந்து கொண்டு, தன்னை மறைத்துக் கொண்டார்.

வியாகரண சூத்திரத்தை மெய்மறந்து உபதேசித்ததைக் கேட்டவாறு இருந்தனர் சீடர்கள். அவர்களில் கௌடபாதர் ஒருவர் மட்டும் இயற்கை உபாதையைக் கழிக்க வெளிச் சென்றார். ஏனைய மற்றோர் குருநாதரின் வியாக்கியானங்களில் – இத்தரணிக்குத் தேவையான தங்க-நிகர் எண்ணங்களால் ஈர்க்கப்பட்டு, தங்களை மெய் மறந்தவர்களாகவும், தங்கள் சந்தேகங்கள் எண்ணத்தில் உதித்த மாத்திரத்திலேயே, அதற்குண்டான பதிலைத் தம் குருநாதர் தந்தருளியதைக் கேட்டு பிரமித்த சிஷ்யர்கள், ஒருகட்டத்தில் தம்முடைய குருநாதரின் திருமுக மண்டலத்தை காண யத்தனித்த அவர்கள், தங்களுக்கும், குருவிற்கும் இடையில் இருந்த கனமான திரைச் சீலையை விலக்கியபோது ஆதிசேஷனின் உருவைப் ் பார்த்த மாத்திரத்திலேயே அனைவரும் கருகிச் சாம்பலாகினர்!உயிரிழந்த சீடர்கள் அனைவரையும் உயிர்ப்பிக்கும் வித்தை அறிந்தவராயினும், விதியின் வழிய்ில் குறுக்கிடமனமில்லாததால்தானோ என்னவோ அல்லது, குருவின் வார்த்தைகளைக் கேளாதவர்க்கு இதுவே கதி என்று மற்ற சீடர்களுக்கு உணர்த்துவதற்காகவோ தம் சீடர்களை உயிர்ப்பிக்காமலிருந்துவிட்டார்!

பின்பு, ஆதிசேஷ உருவை மாற்றிக் கொண்டு, உயிரோடு இருந்த ஒரே சீடர் கௌடபாதர்-ஐக் கட்டியணைத்து, அனைத்து உபதேசங்களையும் – 64 கலைகளையும் திறம்பட உபதேசித்்தருளினார்.கௌடபாதர்-ன் முதன்மைச் சீடரே கோவிந்த பகவத் பாதாள்! இம்மகானே பகவத்பாதாள் ஆதிசங்கரரின் ஞானகுருவாவார். இந்நன்னாளில், ஸ்ரீபதஞ்சலி முனிவரை மனத்தளவில் வணங்கி, உங்கள் பூஜையறையில் நெய் தீபமேற்றி வணங்கினால், அனைத்துவித கலைகளையும் கற்றறியச் செய்திடுவார், குரு ஸ்தானத்தில் இருந்து அருள்பாலித்தருளுவார் ஸ்ரீபதஞ்சலி மாமுனி, உங்கள் சந்ததியினர்க்கே!!
பங்குனி 16 (30-3-2026) : திங்கட்கிழமை – சுக்லபட்ச பிரதோஷம். இந்நாளில் விரதமிருந்து, பிரதோஷ காலமாகிய மாலை 4.30 மணிக்கு மேல், சாம்ப சிவ மூர்த்தியை ரிஷபாரூடராகத் தரிசனம் செய்திடல் சாலச் சிறந்தது.
பங்குனி 17 (31-3-2026) : செவ்வாய்க்கிழமை – இன்று வளர்பிறை சதுர்த்தசி. ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஸ்வாமி அவதரித்ததிதி. இந்நன்னாளில் ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, துளசி தளத்தினால் அர்ச்சனை செய்து, பானகம் அமுது செய்விக்க வேண்டும். மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது.

பங்குனி 18 (1-4-2026): புதன்கிழமை – பங்குனி உத்திரம் – இன்றைய தினம் ”கல்யாண மாதம்” எனப் போற்றிக் கொண்டாடப்படும் பங்குனி உத்திரம் – பரிபூரணமாக – நிஷ்களங்கமற்றவனாக பூரண சந்திர ஒளியுடன் பிரகாசிக்கும் பவுர்ணமியுடனும், தமிழ்மாதத்தில் 12-வது மாதமாகிய பங்குனியும் 12-வது ஸ்தானத்தை வகிக்கும் உத்திரநட்சத்திரமும் இணையும் இக்காலத்தையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில்தான், பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட மஹாலட்சுமி அவதரித்த தினமும், திருமாலின் திருமார்பை அலங்கரித்ததும், நான்முகக் கடவுளான பிரம்மனின் நாவில் ஸ்ரீசரஸ்வதி தேவி அமர்ந்ததும், சபரி மலையில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஐயப்பனின் அவதாரத் தினமும், மீனாட்சி – சொக்கநாதர் திருமணத் தினமும், முருகப் பெருமான் தெய்வானையின் திருக்கரம் பற்றிய நன்னாளாகவும், ஸ்ரீவள்ளி தேவி அவதரித்ததும், தசரத சக்கரவர்த்தியின் திருக்குமாரர்களாகிய ஸ்ரீராமன் – சீதா, பரதன் – மாண்டவீ, லக்ஷ்மண – ஊர்மிளை, சத்ருக்கனன் – சுதகீர்த்தி, ஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் போன்ற தெய்வத் திருமணங்கள் அரங்கேறிய நன்னாளாகவும், பங்குனி – உத்திர நட்சத்திரத்துடன் இணையும் சந்திரன், கன்னி ராசியிலிருந்துகொண்டு, எவ்விதக் களங்கமுமின்றி காட்சிதரும் இந்நாளில் சந்திர பகவானை தரிசித்தால், சகல வித நன்மைகளும், மனநிறைவுடன் கூடிய மகிழ்ச்சியையும் தந்தருள்வதாக அனைத்து புராண – இதிகாசங்களிலும் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளன. காரைக்கால் அம்மையார் கைலாய எம்பெருமானின் திருவடி நிழலில் இணைந்த நாள். மேலும், இன்று பௌர்ணமி விரதம். இந்நன்னாளில், காலை முதல் விரதமிருந்து, மாலை வேளையில் சந்திரனைத் தரிசித்தபிறகு, சத்தியநாராயண பூஜையைச் செய்ய வேண்டும், இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு, ‘‘அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வேன்….!” என சத்தியப் பிரமாணம் செய்திருப்பதாக ஸ்காந்த புராணம் கூறுகிறது. இங்ஙனம் சத்தியம் செய்திருப்பதாலும், அதன்படி தன் சங்கல்பத்தின்படி, இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் அவர்தம் அபிலாஷைகள் அனைத்தையும் ஈடேற்றித் தருவதாலேயே அவருக்கு ‘‘சத்திய நாராயணன்” என்ற காரணப் பெயர் உண்டாயிற்று. நாமும் பக்தி – சிரத்தையுடன் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி, மகிழ்வுடன், மன-நிறைவுடன் வாழ்வோமாக!!

பங்குனி 22 (5-4-2026) : ஞாயிறு – சங்கடஹர சதுர்த்தி. இரவு 9 மணி வரையில் உபவாசமிருந்து, கீழ்க்காணும் மந்திர சக்தி வாய்ந்த ஸ்லோகத்தை ஒன்பது அல்லது பதினெட்டு முறைகள் சொல்லவும்.
‘‘ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சங்கடம் நிவாரய நிவாரய”என்று சொல்லி, 18 முறை நமஸ்காரங்களைச் செய்துவிட்டு, தேங்காய் – பழங்கள், 18 கொழுக்கட்டைகளை நைவேத்தியம் செய்வித்து, வானில் சந்திர பகவானை தரிசித்துவிட்டு, பின் உணவருந்தலாம். இவ்விரதத்தைக் கைக்கொள்பவர்க்கு, அவர்களின் அபிலாஷைகள் அனைத்தையும் ஈடேற்றித் தந்தருள்புரிந்திடுவார் எனக் கூறுகிறது கந்தபுராணம். நமக்குத் தேவை நம்பிக்கை மற்றும் உண்மையான பக்தி மட்டுமே!

பங்குனி 25 (8-4-2026) : புதன் கிழமை ஸ்ரீவராஹ ஜெயந்தி. கிருஷ்ணபட்ச சஷ்டி. இன்று உபவாசமிருந்து ஸ்ரீகந்த பெருமானை வழிபட்டால், நம் சந்ததியினர் சீரும், சிறப்புமாக வாழ்ந்திடுவர்.
பங்குனி 29 (12-4-2026) : ஞாயிற்றுக்கிழமை சிரவண விரதம். ”திருவோணத்தான் உலகாளும் என்பார்களே” இது ஆழ்வார் பெருமக்களின் சத்தியமான வாக்கு! இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பார்க்கு, முற்பிறவி பாபங்களும் அனைத்தும் தீயினிற் தூசாகிடும். நம் சந்ததியினர் அனைத்து துறைகளிலும் மேலோங்கி நின்று தர்மத்துடன் வாழ்வாங்கு வாழ்வர்.
பங்குனி 30 (13-4-2026) : திங்கட்கிழமை.ஏகாதசி. – பாப விமோசினி ஏகாதசி. கங்கையைவிடப் புண்ணிய நதி கிடையாது. காயத்ரி மகா மந்திரத்தைவிட உயர்ந்த மந்திரங்கள் இவ்வுலகில் இல்லை! தாயை விடச் சிறந்த தெய்வமில்லை. ஏகாதசியைவிட உயர்ந்த விரதமில்லை என்பது ஆன்றோர் வாக்கு!

தசமி, ஏகாதசி, துவாதசி இம்மூன்று தினங்களை உள்ளடக்கியதுதான் ஏகாதசி விரதம், அதனால்தான் இவ்விரதத்திற்கு இவ்வளவு ஏற்றம். ஏகாதசி விரதத்தைப் பற்றிக் கூறாத புராணங்கள் இல்லை; இதிகாசங்கள் இல்லை!!
முதல் தினமாகிய தசமியன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அன்று மதியம் மட்டும் உணவருந்தலாம். அதற்குப் பிறகு மறுதினம் ஏகாதசியன்று இரவு கண்விழித்து இறைவனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்திடல் வேண்டும்.மறுதினம் துவாதசிதிதியன்று நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் சேர்த்து சாதத்தை இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பிறகு, உறவினர்களுடன் உணவருந்துதல் வேண்டும்.இவ்விதம் பக்தி – சிரத்தையுடன் ஏகாதசி விரதம் இருப்பவர்களின் முன் ஜென்ம பாபங்கள் அனைத்தும் பறந்தோடிவிடும். இந்தப் பிறவியில் நமக்குத் தேவையான அனைத்து இக – பரசுகங்களைக் குறைவின்றி அடைந்து மறுஜென்மமில்லாத ஸ்ரீவைகுண்டப் பதவியை எய்துவர் என்பது அனைத்து புராணங்கள் மற்றும் இதிகாசங்களால் உறுதிபட உரைக்கின்றது. இவ்விரதத்தைப் பற்றிக் கூறாத புராணங்களே இல்லை எனக் கூறலாம். அவ்வளவு மகாத்மியம் மிக்கது இவ்விரதம்.

Tags : Saturn ,Lord ,Kumba ,Guru ,Bhagavan ,
× RELATED திருக்கண்ணபுரம் – ராமநந்தீஸ்வரர் திருக்கோயில்