×

பிளஸ் 2 மாணவி கொடூர கொலை: பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கிராம மக்கள் தொடர் மறியல்; தூத்துக்குடி அருகே பரபரப்பு

குளத்தூர்: தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தொடர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. புகாரை வாங்காமல் அலைக்கழித்த பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த ஒரு மாணவி பொதுத்தேர்வு எழுதி வந்தார். கடந்த 10ம் தேதி இரவு வீட்டின் அருகே காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதையை கழிக்கச் சென்று ஒரு மணி நேரமாகியும் திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் காட்டுப்பகுதிக்கு தேடிச் சென்றனர். ஆனால் அவரை காணாததால் குளத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை காட்டுப்பகுதியில் மாணவி முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை மீட்ட போலீசார் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு குறுக்குச்சாலை – ராமேஸ்வரம் சாலையில் வேடநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். மாணவி மரணத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். புகார் கொடுக்கச் சென்ற போது அலைக்கழித்த குளத்தூர் காவல் நிலையம் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சம்பவ இடத்துக்கு மார்க்கண்டேயன் எம்எல்ஏ, எஸ்பி மதன், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் நேற்று நள்ளிரவு 12.30 மணி வரை போராட்டம் தொடர்ந்தது. அப்போது கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். நேற்று காலை வரை யாரும் கைது செய்யப்படாததால் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை விலக்கில் மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் காலை 9 மணி முதல் மறியலில் ஈடுபட்டனர். எஸ்பி மதன் மற்றும் போலீசார் பேசியும் உடன்பாடு ஏற்படாததால் மாலை 6 மணியை கடந்தும் போராட்டம் தொடர்ந்தது.

போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அதிமுக, நாம் தமிழர், தவெக, பாஜ, புதிய தமிழகம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையே குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து எஸ்பி உத்தரவிட்டார். தனிப்படையினர் சில மாணவர்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாணவி மாயமானதும் புகாரை வாங்காமல் அலைக்கழித்ததாக விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீணாவை சஸ்பெண்ட் செய்து டிஐஜி சரவணன் உத்தரவிட்டு உள்ளார். இதை தொடர்ந்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்டாரா இல்லையா என்பது உடற்கூறாய்வு முடிவில்தான் தெரிய வரும். எனவே உண்மைக்கு மாறான தகவலை பரப்ப வேண்டாம் என தெரிவித்து உள்ளனர்.

* தங்க மோதிரம் பரிசு பெற்றவர்
கொலை செய்யப்பட்ட மாணவி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் 3ம் இடம் பிடித்து, ஊர் பெரியவரிடம் தங்க மோதிரம் பரிசு பெற்றுள்ளார். தற்போது பிளஸ் 2 பயோமேக்ஸ் குரூப் எடுத்துள்ளார். தமிழ், ஆங்கிலம், கெமிஸ்ட்ரி தேர்வு எழுதியுள்ளார். தொடர்ந்து இன்று இயற்பியல் தேர்வு எழுத இருந்த நிலையில் கொல்லப்பட்டது சக மாணவிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Tags : TUTUKUDI ,Kulathur ,Tuticorin ,Government Secondary School ,Tuthukudi District ,
× RELATED மகளை கடத்த முயன்றதை தடுத்த தாய் கொலை:...