சென்னை: தன்னை காரில் கடத்தி மயக்க ஸ்பிரே அடித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுத்த புகாரில் திடீர் திருப்பமாக, பாதிக்கப்பட்ட பி.டெக் மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சரியாக படிக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் பொய் புகார் கொடுத்தது அம்பலமாகியுள்ளது. திருச்சியை சேர்ந்தவர் சிந்து (22), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). விஜய் ரசிகையான இவர் திருச்சியில் பி.டெக் படித்து வருகிறார். பிராஜக்ட் ஒர்க் செய்ய அவரது கல்லூரி நிர்வாகம், அடையாறில் உள்ள சிஎல்ஆர்ஐ நிறுவனத்தில் மாணவியை பரிந்துரை செய்து இருந்தனர். இதனால் மாணவி சிந்து கடந்த பிப்ரவரி 14ம் தேதி சென்னை வந்தார். அடையாறில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
இதற்கிடையே அபிராமபுரம் காவல் நிலையத்தில் உள்ள கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் பிராஜக்ட் ஒர்க் செய்ய சென்னை வந்தேன். கடந்த 9ம் தேதி எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு எனது புகைப்படம் ஆபாசமாக சித்தரித்து மர்ம நபர் ஒருவர் பல படங்களை அனுப்பினார். அப்போது நான் அடையாறு சிஎல்ஆர்ஐ நிறுவனத்தில் பிராஜக்ட் பணியில் ஈடுபட்டிருந்தேன். எனது புகைப்படங்கள் நிர்வாணமாக அனுப்பட்டிருந்ததால், நான் அதிர்ச்சியடைந்தேன். உடனே எனக்கு வாட்ஸ் அப் அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், சிஎல்ஆர்ஐ நிறுவனத்தின் 2வது கேட் அருகே நிற்கும் காரில் ஏறும்படியும், அதன் பிறகு உனது ஆபாச புகைப்படங்கள் அழிக்கப்படும் என்று கூறியுள்ளார். அதை கேட்ட மாணவி, காரின் அருகே வந்த போது, 2 பேர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினர். பிறகு எனது முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்தனர். அதன் பிறகு நான் நள்ளிரவு தான் கண் விழித்தேன். அப்போது என்னை அவர்கள் அடையாறில் என்னை காரில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டனர். பிறகு மயக்க நிலையில் அறை எடுத்து தங்கியுள்ள விடுதிக்கு வந்து உடை மாற்றும் போது, எனது மார்பு மற்றும் உடலில் சில மாற்றங்களை கண்டேன்.
இதனால் நான் மறுநாள் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் விசாரித்த போது, நான் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். நான் மருத்துவமனையில் இருக்கும் போது, மீண்டும் அந்த மர்ம நபர் என்னை தொடர்பு கொண்டு மருத்துவமனை எதிரே உள்ள காருக்கு அழைத்தார். அதன்படி அங்கு சென்ற போது, உனக்கு நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்ல கூடாது, அப்படி சொன்னால் உன்னுடன் நாங்கள் நெருக்கமாக இருந்த வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டினர். இதனால் அச்சமடைந்த நான் விடுதி அறைக்கு வந்துவிட்டேன். பின்னர் என்னை அவர்கள் அடிக்கடி தொந்தரவு செய்து அழைப்பார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் குறித்து கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் புகாரை பெற்று விசாரணை தொடங்கினார். அதேநேரம், மாணவி அளித்த புகார் தொடர்பாக, போலீஸ் கமிஷனர் அருண் கவனத்திற்கு மகளிர் போலீசார் உடனே கொண்டு சென்றனர். அதை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், கமிஷனர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகள் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி துணை கமிஷனர் வனிதா தலைமையிலான தனிப்படையினர் மாணவி புகார் அளித்த ஒரு மணி நேரத்தில், கமிஷனர் உத்தரவுப்படி மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து, பாதிக்கப்பட்ட மாணவியிடம், மர்ம நபர்கள் தொடர்பான அங்க அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், அவரது செல்போனையும் பெற்று மார்பிங் புகைப்படங்களையும் ஆய்வு செய்தனர். அதோடு இல்லாமல், தனிப்படையினர் கடந்த 9ம் ேததி அடையாறு சிஎல்ஆர்ஐ நிறுவனத்தின் முன்பு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பெற்று மாணவியை காரில் கடத்தப்பட்ட காட்சிகள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்த போது, மாணவி புகாரில் கூறிய நேரத்தில் அடையாறு சிஎல்ஆர்ஐ நிறுவனத்தின் முன்பு எந்த காரும் நிற்க வில்லை என்று தெரியவந்தது.
அதேபோல் கடந்த 10ம் தேதி தனியார் மருத்துவமனை முன்பு காரில் வந்து மிரட்டியதாக மாணவி அளித்த புகாரின் படி மருத்துவமனை முன்பு உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போதும், எந்த காரிலும் மாணவி ஏறவில்லை என தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த துணை கமிஷனர் வனிதா தலைமையிலான தனிப்படையினர், புகார் அளித்த மாணவியிடம் அன்பாகவும், தோழிபோன்று பேசி விசாரணை நடத்திய போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அப்போது புகார் அளித்த மாணவி, சரியாக படிப்பு வரவில்லை. எப்போது செல்போனுடன் இருப்பதாக அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர்.
கல்லூரியில் கொடுத்த பிராஜக்டை சரியாக செய்து முடிக்கவில்லை. இதனால் எனக்கு மதிப்பெண் சரியாக கிடைக்காது. எனவே எனது கல்லூரி பேராசிரியர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது, பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தேன். இதனால் கடுமையான மன உளைச்சலில் கடந்த ஒரு வாரமாக இருந்து வந்தேன். எனவே பிராஜக்ட் சரியாக செய்யாததால் அதில் இருந்து தப்பிக்க, எனது புகைப்படங்களை நானே பல கோணங்களில் சில ஆப் உதவியுடன் நிர்வாணமாக மார்பிங் செய்து பயன்படுத்தாத செல்போன் எண்ணில் இருந்து எனக்கு புகைப்படம் அனுப்பியது போல், எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி, தன்னை சிலர் மிரட்டியதாகவும், காரில் கடத்தி மயக்க ஸ்பிரே அடித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி, எனது பெற்றோர் மற்றும் கல்லூரி பேராசிரியர்களிடம் இருந்து தப்பிக்க பொய் புகார் அளித்தது தெரியவந்தது.
இதுபோன்ற புகாரால், தவறான பிராஜக்ட் ஒர்க்கில் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போனை சைபர் க்ரைம் நிபுணர்கள் உதவியுடன் இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என்று நினைத்துவிட்டேன். ‘நான் எங்க ஊரு போலீசார் போல், எனது பொய் புகாரை கண்டு பிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் சென்னை போலீசார் நான் கொடுத்தது பொய் புகார் என்று இவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடித்துவிட்டனர். மார்பிங் செய்தது எல்லாம் எனது போனில் என்றும் கண்டுபிடித்துவிட்டனர். வேறு வழியின்றி நான் கொடுத்தது பொய் புகார் என்பது அறிவியல் ரீதியில் உறுதி செய்துவிட்டனர்.
இதனால் நான் தவறான புகார் கொடுத்ததை புகார் அளித்த மாணவி ஒப்புகொண்டார். மாணவி அளித்தது 2 பேர் காரில் கடத்தி பலாத்காரம் செய்ததாக புகார். இதனால் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர், நீதிமன்றத்திற்கு ஆவணங்களை சமர்ப்பிக்கும் வகையில், மாணவியிடம் விசாரணை நடத்திய போது, அதை வீடியோ பதிவு செய்து கொண்டனர். மேலும், மாணவி நான் செய்தது தவறு என்று, தனியாக காவல்துறைக்கு மன்னிப்பு கேட்டு எழுத்து மூலம் கடிதம் கொடுத்துள்ளார். அதையும் தனிப்படையினர் வீடியோ பதிவு செய்துள்ளனர். பின்னர் மாணவி அளித்த புகாரை அவர் தனது சுய நினைவுடன் கொடுத்த புகாரை திரும்ப பெறுவதாக மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார்.
அதை தொடர்ந்து கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் சட்ட நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி, மாணவி கொடுத்த மன்னிப்பு கடிதத்தை ஏற்று அவரது பொய் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்ப பெறுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிராஜக்ட் ஒர்க் சரியாக செய்யாததால் மாணவி ஒருவர் அதில் இருந்து தப்பிக்க, தன்னை 2 பேர் காரில் கடத்தி மயக்க ஸ்பிரே அடித்து பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கொடுத்ததும் போலீஸ் விசாரணையில் தற்போது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ‘‘நான் எங்க ஊரு போலீசார் போல், எனது பொய் புகாரை கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், சென்னை போலீசார் நான் கொடுத்தது பொய் புகார் என்று இவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடித்துவிட்டனர்.
* சமூக வலைத்தளங்களில் மாணவிகள் கவனமாக இருக்க வேண்டும்
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களை பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் சில அறிவுரைகள் தெரிவித்துள்ளனர்.
* பெற்றோர் அனுமதி இல்லாமல் இன்ஸ்டா, பேஸ்புக் பக்கங்களில் அக்கவுண்ட் தொடங்க கூடாது.
* சமூக வலைத்தள பக்கங்களை குறிப்பாக பெண் குழந்தைகள் பயன்படுத்தினால் அவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
* இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும்.
* முன்பின் தெரியாத நபர்களை இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் நண்பர்களாக ஏற்றுக்கொள்ள கூடாது.
* சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய கூடாது.
* ரீல்ஸ் மோகம், அதிக லைக் வரவேண்டும் என்று ஆண் நண்பர்களுடன் இணைந்து வீடியோ, புகைப்படங்கள் பதிவேற்றம் செய்ய கூடாது.
* இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் மெசேன்ஞ்சர்கள் மற்றும் வாட்ஸ் அப் மூலம் அறிமுகம் இல்லாத ஆண்களிடம் பேசுவதோ அல்லது புகைப்படங்கள் அனுப்புவதை பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* சொந்த ஊர்களில் இருந்து வெளியூர் செல்லும் போது, அங்குள்ள இன்ஸ்டா நண்பர்களை நேரில் பார்ப்பதை கல்லூரி மாணவிகள் முதல் இளம் பெண்கள் வரை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
* இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் நண்பர்களிடம் எந்த சூழ்நிலையிலும் கல்லூரி மாணவிகள் தங்களது செல்போன் எண்ணை பகிரக்கூடாது.
* இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான நபர்களிடம் சிக்கிக்கொண்டால் உடனே பாதிக்கப்பட்ட பெண்கள் 1091, 1098, 1930, 9150250665 ஆகிய எண்களில் உடனே புகார் அளிக்க வேண்டும்.
