வேலூர், மார்ச் 13: தமிழகத்தில் 2025-2026-ம் கல்வியாண்டிற்கான சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் கற்றல்-கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம் மற்றும் மாணவர் வளர்ச்சி எனப் பன்முகத் திறன்களில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா நான்கு பள்ளிகள் அதாவது இரண்டு தொடக்க அல்லது நடுநிலைப் பள்ளிகள் மற்றும் இரண்டு உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளிகள் என மாநிலம் முழுவதும் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்படவுள்ளன. மாணவர்களின் ஒட்டு மொத்த ஆளுமை வளர்ச்சிக்குவித்திடும் சிறந்த பள்ளிகளை அடையாளம் கண்டு கவுரவிப்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 2025-2026-ம் கல்வியாண்டிற்கான பேராசிரியர் அன்பழகன் விருதுக்கான பள்ளிகளைத் தேர்வு செய்ய பல்வேறு முக்கிய மதிப்பீட்டு அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள், என்.எம்.எம்.எஸ். நீட், ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வுகளில் மாணவர்களின் பங்கேற்பு மற்றும் தேர்ச்சி விகிதம் முக்கியக் காரணியாகக் கொள்ளப்படும். வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், நூலகப் பயன்பாடு, இணையதள வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களின் பயன்பாடு மேலும் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளான ஆகியவையும் ஆய்வு செய்யப்படும்.
மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் கலைத் திருவிழா, விளையாட்டுப் போட்டிகள், இலக்கிய மன்றச்செயல்பாடுகள், சாரண-சாரணியர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படை போன்றவற்றில் பள்ளிகளின் பங்களிப்பு மதிப்பீடு செய்யப்படும். பள்ளி வளாகத்தின் தூய்மை, போதுமான எண்ணிக்கையிலான கழிவறை வசதிகள், பாதுகாப்பான குடிநீர் வசதி மற்றும் முறையாகப் பராமரிக்கப்படும் பள்ளித் தோட்டம் போன்ற சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இது தவிர, பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடு. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பங்களிப்பு மற்றும் எமிஸ் தரவுகளைச் சரியாகப் பராமரித்தல் போன்ற நிர்வாகச் செயல்பாடுகளும் கணக்கில் கொள்ளப்படும்.
விருதுக்குரிய பள்ளிகளைத் தேர்வு செய்ய மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுவும், மாநில அளவில் பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவினர் தகுதியான பள்ளிகளைப் பரிந்துரை செய்தவுடன், மாநிலக் குழு அதனை ஆய்வு செய்து இறுதி செய்யும். தகுதியான பள்ளிகளின் விவரங்களை உரிய மதிப்பீட்டுப் படிவங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
