×

ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து கொலை, வன்கொடுமை வழக்கு பதிவு

 

மானாமதுரை போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய வாலிபர் ஆகாஷ் டெலிசன் பலியானது ெதாடர்பாக அவரது தந்தை ராஜேஷ்கண்ணன் தொடந்த வழக்கில் ஐகோர்ட் கிளை, உடனடியாக உடற்கூராய்வு செய்யவும், அதன் அறிக்கை மற்றும் வீடியோவை மருத்துவக்கல்லூரியின் முதல்வர், ஆகாஷின் பெற்றோரிடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தது.

அதே நேரம் இந்த சம்பவத்தை கண்டித்து சில கட்சிகள், அமைப்புகள் சார்பில் மானாமதுரை அருகே ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் தொடர் போராட்டம் நடந்தது. இதனிடையே, வழக்கறிஞர் குழுவை அமைத்த நீதிமன்றம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், நான்கு வழிச்சாலை பகுதியில் இருந்து இடம் மாற போராட்டக்காரர்கள் மறுத்தால் நீதிமன்றமே அகற்ற உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான ஆஜராகி, ‘‘போராட்டக்காரர்கள் இதுவரை கலைந்து செல்லவில்லை. நடுரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்’’ எனக்கூறி, அது தொடர்பான வீடியோவை நீதிபதி முன் தாக்கல் ெசய்தார். மேலும், ‘‘இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, தீண்டாமை வன்ெகாடுமை பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘வேறு இடத்திற்கு சென்று போராட்டத்தைத் தொடரலாம் என அறிவுறுத்திய பிறகும் ஏன் செல்லவில்லை? முதல் தகவல் அறிக்கையிலும் திருத்தம் செய்யப்பட்டு விட்டதே’’ என்றார்.

அப்போது அரசு தரப்பில், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் சூழலில், பிற சமூகத்தினர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் தரப்பு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கும் வகையில், போராட்டத்தை கைவிடாமல் இருப்பது சரியானது அல்ல. மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே சென்று போராட்டத்தைத் தொடரலாம்.

மாலை 4 மணிக்குள்(நேற்று) அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும். தவறினால், அங்கிருந்து அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்’’ என்றார். மேலும் ஆகாஷ் மரண வழக்கின் விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டார். ஐகோர்ட் கிளை உத்தரவை அடுத்து, மானாமதுரை அருகே ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் 5வது நாளாக நேற்று நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : Court ,Rajeshkannan ,Akash Teleson ,Manamadurai ,Medical College ,Akash ,
× RELATED புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா..!