தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முரளி கடலூரில் நேற்று கூறுகையில், இந்தியாவில் இதுவரை காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது கிடையாது. அதேபோல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது கிடையாது. இருந்தபோதிலும் மக்கள் மத்தியில் தற்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. தற்போது பெட்ரோல், டீசல் எந்தவித தட்டுப்பாடும் இன்றி பங்கிற்கு வந்து கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து பங்கிலும் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு இருந்து வருகிறது.
மேலும் மூன்று மாதத்திற்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது. ஆகையால் கேன், தண்ணீர் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வாங்க வேண்டாம். தற்போது போடுபவர்கள் 4 லிட்டர் பெட்ரோல், டீசல் பிடித்து வருகின்றனர். வதந்தியால் மக்கள் தேவைக்கு அதிகமாக பெட்ரோல், டீசல் வாங்கினால் விரைவில் காலியாகி தட்டுப்பாடு ஏற்படும். இதுவரை முன்பு இருந்தது போல் பெட்ரோல், டீசல் எந்தவித குறைவும் இன்றி கிடைத்து வருகிறது. மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம், என்றார்.
- 24 மணி நேரத்துக்கு மட்டுமே சிலிண்டர்கள் இருப்பு உள்ளது: ஓட்டல்கள் மூடப்படும்: விக்கிரமராஜா எச்சரிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா நேற்று பரமக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக கடுமையான காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்கள் தரப்பிலிருந்து கோரிக்கை மனு பிரதமர், பெட்ரோலியத்துறையிடம் கொடுத்துள்ளோம். தமிழக முதல்வரிடமும் முறையிட்டுள்ளோம்.
உடனே தீர்வு காண்பதாக கூறியுள்ளனர். காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவு வகைகள் தயாரிப்பு குறைந்துள்ளது. உணவகங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கான எரிவாயுதான் உள்ளது. இதனால் மூடும் நிலை உள்ளது. தற்போது வீடுகளுக்கான காஸ் சிலிண்டரை செல்போனில் புக்கிங் செய்யவே முடியவில்லை என கூறுகின்றனர். அதனை நிவர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

