×

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது: தமிழ்நாடு அரசு

புதுடெல்லி: தமிழ்நாட்டின் கல்வி உரிமையை பாதுகாக்க நவோதயா பள்ளிகளை எதிர்க்கும் பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்தது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நவோதயா பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கி 2017ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, ஒன்றிய அரசின் திட்டங்களை மாநில அரசு அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானவை.

இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி என இவை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகின்றன. தமிழ்நாட்டில் தற்போது 38 மாதிரி பள்ளிகள் உறைவிட வசதியுடன் சிறப்பாக இயங்கி வருகின்றன. இதில் தரமான கல்வி வழங்கப்படுவதால், 2024-2025ம் கல்வியாண்டில் மட்டும் 1340 மாணவர்கள் அகில இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். எனவே, நவோதயா பள்ளிகள் இல்லாமலேயே மாநிலத்தின் கல்வித் தரம் மிகச் சிறப்பாக உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பத்திரத்தில், ‘சமகிர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 3548.22 கோடி ரூபாய் கல்வி நிதியை ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதனால் ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் மாணவர் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்படுகிறது. புதிய கல்வி நிறுவனங்களை தொடங்குவதை தவிர்த்துவிட்டு, ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி நிலுவையில் உள்ள நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மாநில சுயாட்சியை பாதுகாக்கும் வகையில் தற்போதைய உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி உதவியை விரிவாக்கம் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Government of Tamil Nadu ,New Delhi ,Navothaya ,Supreme Court ,Tamil Nadu government ,Javakar Navothaya Vidyalaya School ,
× RELATED நாட்டிலேயே முதன்முறை.. கடந்த 13...