×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்

*கோடை சீசன் பணிகள் பாதிப்பு

ஊட்டி : பணி நிரந்தரம் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலை பண்ணை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, தேயிலை பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்களும், 10க்கும் மேற்பட்ட பண்ணைகளும் உள்ளன.

இவற்றில் ஏராளமான தினக்கூலி பணியாளர்களும், நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். நிரந்தர பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தினக்கூலி பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலை துறை பண்ணை மற்றும் பூங்கா சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று முன்தினம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

நேற்று பணிகளை புறக்கணித்து ஊட்டி ரோஜா பூங்கா அருகேயுள்ள தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண கோரி தோட்டக்கலை இணை இயக்குநரை சந்தித்து மனு அளித்தனர்.

தோட்டக்கலை பண்ணை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் கோடை சீசன் நாற்று நடவு பணிகள், பராமரிப்பு பணிகள் பாதிப்படைந்துள்ளன.

Tags : Ooty ,Nilgiris district ,Botanical Garden ,Rose Garden ,Sims Garden ,Tea… ,
× RELATED உலக நாடுகளில் உள்ள 7 எரிமலைச்...