- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- இந்திய தேர்தல் ஆணையம்
- கேரளா
- மேற்கு வங்கம்
- அசாம்
- புதுச்சேரி. ...
புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை அறிவிக்க அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று, புதிய அரசு பொறுப்பேற்றது. அந்த ஐந்து மாநிலங்களின் ஆட்சி காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுடன் முடிவடைவதால், புதிய தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வந்தது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான முழு குழுவினர், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆய்வுகளை முடித்த ஆணையம், கடந்த 6 மற்றும் 7ம் தேதிகளில் கேரளாவில் தனது ஆய்வை நிறைவு செய்தது. தொடர்ந்து, இறுதி கட்டமாக மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 8ம் தேதி முதல் இன்று வரை மூன்று நாட்கள் தங்கியிருந்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
மேற்குவங்கத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் போது, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு சுமார் 60 லட்சம் வாக்காளர்களின் நிலை குறித்து நீதிமன்ற விசாரணையில் இருப்பது முக்கிய பிரச்னையாக விவாதிக்கப்பட்டது. இன்று கொல்கத்தாவில் மாநில அதிகாரிகளுடன் இறுதிக்கட்ட ஆலோசனைகளை முடித்துக் கொண்டு, செய்தியாளர் சந்திப்பிற்கு பின் ஆணைய குழுவினர் டெல்லி திரும்புகின்றனர். மேற்கு வங்க சட்டப்பேரவை மே 7ம் தேதியும், தமிழக சட்டப்பேரவை மே 10ம் தேதியும், அசாம் மே 20ம் தேதியும், கேரளா மே 23ம் தேதியும் மற்றும் புதுச்சேரி ஜூன் 15ம் தேதியும் முடிவுக்கு வருகின்றன. அதனால் டெல்லி திரும்பிய அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்குள் தேர்தல் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆய்வின் நிறைவில் பேசிய அதிகாரிகள், ‘அனைத்து மாநிலங்களிலும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தனர். வரும் 16ம் தேதி 10 மாநிலங்களில் காலியாக இருக்கும் 37 மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தல் நடப்பதால், அதன்பின் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் 5 மாநிலங்களில் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான பணிகளை முடுக்கிட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
