தர்மபுரி, மார்ச் 10: தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இயங்கி வருகிறது. இதன் மூலம் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அரசுப்பள்ளிகளில் கல்வி படிக்கும் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு சமூக பங்களிப்பு நிதி (சிஎஸ்ஆர்) மூலம் 60 மாணவர்களுக்கு, சுமார் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் உதவி உபகரணங்களை அசோக் லேலண்ட் பவுண்டேசன் வழங்கியுள்ளது. இந்த உதவி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சிஇஓ ஜோதி சந்திரா தலைமையில் நடந்தது. தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளி ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு, உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அசோக் லேலண்ட் பவுண்டேசன் மாவட்ட மேலாளர் மனோஜ் பாஸ்கர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
