×

ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதில் திமுகவுக்கு உடன்பாடு தான் ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து வந்தவருக்கு வரவேற்பளிப்பது வெட்ககேடானது காட்பாடியில் துரைமுருகன் பேட்டி

வேலூர், பிப்.11: ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்தவருக்கு வரவேற்பு அளிப்பது வெட்கக்கேடானது என்று காட்பாடியில் துரைமுருகன் கூறினார். காட்பாடி சட்டமன்றத் தொகுதி வடக்கு பகுதி வாக்குசாவடி திமுக தேர்தல் பணிக்குழு கூட்டம் இன்று நடந்தது. வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, எம்எல்ஏ கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். பின்னர், துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது தேர்தலுக்காக தான் வரும் தேர்தலை கருத்தில் கொண்டு அறிவித்துள்ளனர். அவர் மறைவின்போது அதிமுக அரசு தான் இருந்தது.

அப்போது ஒருவர் கூட அஞ்சலி செலுத்த கூட வரவில்லை என்பது வேதனையானது. ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்வதில் திமுகவுக்கு உடன்பாடு தான் பறிமுதல் செய்யட்டும். சசிகலா வரவேற்பு என்பது தியாகத்துக்கும் கொள்ளை கூட்டத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது. இதுவரையில் ஒரு ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து ₹10 கோடி அபராதம் செலுத்திவிட்டு தண்டனையை அனுபவித்து வந்தவருக்கு வரவேற்பளிப்பது வெட்ககேடானது. 7 பேர் விடுதலையில் நாங்கள் எதுவும் கையெழுத்து போட்டு தண்டனையை உறுதி செய்யவில்லை அப்படி இருந்தால் அதனை முதல்வர் காட்டட்டும்.பத்திரபள்ளி அணைக்கு நாங்கள் தான் நிதி ஒதுக்கி டெண்டர் வைத்தோம் அது நீதிமன்றம் சென்றதால் அப்படியே நின்றுவிட்டது. தற்போது மேலும் ₹100 கோடி ஒதுக்கியுள்ளனர். ஆனால் அணையை கட்டமாட்டார்கள். ஆட்சி முடியும் போது கட்டுவது என்பது முடியாதது.

டிடிவி தினகரனும் திமுகவும் இணைந்து அதிமுகவுக்கு சதிவலை பின்னுவதாக முதல்வர் கூறுவது சரியில்லை. அதற்கு சசிகலாவே போதும். முதல்வருக்கு கொலை மிரட்டல் என்பது கடுமையாக கண்டனத்திற்குரியது. இதுபோன்ற கலாச்சாரங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஜவ்வாது மலைதொடரில் உள்ள பீஞ்சமந்தை சாலையை எங்கள் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பலமுறை வாதாடி பெற்றார். ஆனால் முதல்வர் தெரியாமல் பேசுகிறார். அவர் வேண்டுமானால் பைல்களை பார்க்கக்கட்டும். வாரிசு அரசியல் என்று கூறுகிறார்கள், பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான். இவர்கள் ஏன் வேதனையடைகிறார்கள்? மு.க.ஸ்டாலின் படிப்படியாக கட்சியில் வளர்ந்து தான் இந்த அந்தஸ்த்திற்கு வந்துள்ளார்.

வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து மவுனமாக தவவாழ்க்கை மேற்கொண்டுள்ளார் ஓபிஎஸ். அவர் எதாவது சதி செய்கிறாரா என தெரியவில்லை. திமுக கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DMK ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு