×

மாநிலங்களவை தேர்தல் பாஜ வேட்பாளர் வேட்புமனு பரிசீலனையில் முறைகேடு: திரிணாமுல் காங். புகார்

கொல்கத்தா: மாநிலங்களவை தேர்தலுக்கான பாஜ வேட்பாளரின் வேட்புமனுவை பரிசீலனை செய்ததில் முறைகேடுகள் நடந்திருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் குற்றம்சாட்டி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 5 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வரும் 16ம் தேதி நடக்க உள்ளது. இதில், எம்எல்ஏக்கள் அடிப்படையில், 4 இடங்களில் திரிணாமுல் காங்கிரசும், ஒரு இடத்தில் பாஜவும் வெற்றி பெற உள்ளன.

பாஜ சார்பில் ராகுல் சின்ஹா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்புமனு பரிசீலனையில் முறைகேடு நடந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சி சார்பில் கடந்த 6ம் தேதி புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இத்தகவலை திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஆரூப் பிஸ்வாஸ் நேற்று தெரிவித்து பேசுகையில், ‘‘பாஜ வேட்பாளர் ராகுல் சின்ஹாவின் பிரமாண பத்திரத்தில் சொத்து, வாகனங்கள், பண கையிருப்பு, கடன், முதலீடுகள் தொடர்பாக முரண்பாடுகளும், சில தகவல்கள் மறைக்கப்பட்டும் இருந்தன.

அந்த முரண்பாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டியும், எங்கள் ஆட்சேபனையை தேர்தல் அதிகாரி புறக்கணித்தார். கடந்த 6ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நேரம் கிட்டத்தட்ட முடிந்த பிறகு, திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாக மீறுவதாகும்’’ என்றார். இந்த குற்றச்சாட்டுகளை பாஜ வேட்பாளர் ராகுல் சின்ஹா மறுத்துள்ளார். வேட்புமனு தாக்கலின் போது சமர்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் முறைப்படி இருந்ததாக அவர் கூறி உள்ளார்.

Tags : BJP ,Rajya Sabha ,Trinamool Congress ,Kolkata ,Election Commission ,West Bengal ,
× RELATED ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலின் சென்னை பயணம் ரத்து..!