×

கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி பலாத்கார வழக்கில் 3 பேரும் குற்றவாளிகள்: நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

 

கோவை: கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் தொடர்புடைய 3 பேரும் குற்றவாளிகள் என கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி இன்று பிற்பகல் பரபரப்பு தீர்ப்பு கூறினார். கோவை பீளமேட்டில் காதலருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி வாலிபர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த கருப்பசாமி (30), அவரது சகோதரர் காளீஸ்வரன்(21), மதுரையை சேர்ந்த அவர்களது உறவினர் தவசி(20) உள்ளிட்ட 3 பேரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.

அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு, தற்போது கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கில் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், விரைவில் இந்த வழக்கை முடிக்கவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மூவர் மீதும் 250 பக்க குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. 72 பேரிடம் சாட்சி விசாரணை நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 27ம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து மார்ச் 7ம் தேதி (இன்று) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சுந்தராஜன் அறிவித்தார்.

அதன்படி, இன்று பிற்பகல் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. முன்னதாக பலாத்கார வழக்கில் தொடர்புடைய கருப்புசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரை, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் இன்று பலத்த பாதுகாப்புடன் பிற்பகல் அழைத்து வந்தனர். பின்னர் கோர்ட்டில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு கதவுகள் மூடப்பட்டன. பின்னர் 2.05 மணியளவில் நீதிபதி சுந்தராஜன் கோர்ட் அறைக்கு வந்தார். பின்னர் அவர் தீர்ப்புகளை வாசிக்கத் தொடங்கினார்.

முதலில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கருப்புசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறி விட்டு மாலை 3 மணிக்கு மேல் தண்டனை உள்ளிட்ட முழு தீர்ப்பு விவரம் கூறப்படும் என நீதிபதி சுந்தரராஜன் அறிவித்து விட்டு நீதிமன்ற அறையிலிருந்து சென்றார். தீர்ப்பு வழங்கப்படுவதை தொடர்ந்து கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Goa ,Goa Magla Court ,Beilamate ,Koh ,
× RELATED மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டுள்ள...