×

எத்தனை சீட், எந்த சின்னம்? கமல் கட்சி ஆலோசனை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் அக்கட்சின் தலைமை அலுவலகத்தில் நேற்று தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கேட்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கூறியதாவது:

திராவிட முன்னேற்றக் கழகத்துடைய குழுவோடு மக்கள் நீதி மய்யம் தலைவர் அமைத்த குழு முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முன் தலைவர் நிர்வாகக்குழு செயற்குழு உறுப்பினர்களுடைய கருத்துகளை கேட்டறிந்து, அடுத்தகட்ட நகர்வுக்கு இவர்களுடைய எண்ணங்களை எல்லாம் அறிந்து கொண்டார். அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.

தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. அதாவது தேர்தலில் போட்டியிடுவதற்காக டார்ச்லைட் சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொண்டோம். இப்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதில் எங்களுடைய கருத்துகள் எல்லாம் எடுத்து வைக்க இருக்கிறோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் சின்னம் குறித்துப் பேச இருக்கிறோம்.

சின்னத்தில் உறுதியாக இருப்பதால்தான் தேர்தல் ஆணையத்தில் டார்ச்லைட் சின்னத்தை வாங்கியுள்ளோம். எவ்வளவு இடங்கள் என்றும் சின்னம் குறித்தும் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையின் போது உங்களுக்கு தெளிவான முடிவு சொல்லப்படும். திராவிட முன்னேற்றக் கழகம் எங்களோட சூழல்ல இருந்து அவங்க பார்க்குறாங்க. மக்கள் நீதி மய்யம் திராவிட முன்னேற்றக் கழகத்துடைய சூழல்ல இருந்து நாங்க பார்க்கிறோம்.

ஒரு நல்ல முடிவு வரும். கருத்தரிக்கும் போதே குழந்தை சிரிச்சா கன்னத்துல குழி விழுமா அப்படின்னு கேட்கறது எல்லாம் இல்ல. அதாவது 10 மாதம் நிறைவடைந்து அந்த பேறுகாலம் வரும்போது உங்களுக்கு என்ன குழந்தை, எப்படி அற்புதமான குழந்தை, ஆரோக்கியமான குழந்தையா என உங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kamal Party ,People's Justice Mayam Party ,Akkachin ,Kamal Hassan ,People's Justice Ministry ,Dimuka Alliance ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்...