×

இணைப்பு விழாவுக்கு திருமங்கலம் ஏன்? வீடியோ அறிக்கைக்காரரை விரட்டியடிக்க ஓபிஎஸ் ரெடி…!

அதிமுகவில் கிளை செயலாளரில் தொடங்கி எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர், மும்முறை முதல்வர், ஒருங்கிணைப்பாளர் என உச்சபட்ச பதவிகளை வகித்ததவர் ஓபிஎஸ். சமீபத்தில் இவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இன்று தனது ஆதரவாளர்களில் ஒரு லட்சம் பேரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைக்கும் விழாவையும் ஓபிஎஸ் முன்னெடுத்துள்ளார். இன்று திருமங்கலம் அருகே ராயபாளையத்தில் இதற்காக பிரமாண்ட விழாவையும் எடுக்க உள்ளார்.

இவ்விழாவிற்கென தனக்கான ஆதரவாளர்கள் நிரம்பி வழிகிற தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களை எல்லாம் கடந்து ஓபிஎஸ் மதுரை மாவட்டத்தின் திருமங்கலத்தை தேர்ந்தெடுத்தது ஏன் என பலரும் பேசி வருகின்றனர். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. திருமங்கலமானது அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கட்சியின் சோதனை காலக்கட்டங்களில் யாரைப் பற்றியாவது கொளுத்திப் போட்டு குளிர் காய்பவருமான வீடியோ அறிக்கை புகழ் ஆர்பி.உதயகுமாரின் தொகுதியாகும்.

அதிமுகவில் இருந்தபோது தன்னை தொடர்ந்து விமர்சித்து வந்த இவருக்கு செக் வைக்கவே, இணைப்பு விழாவுக்கு திருமங்கலம் தேர்வாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தன்னை முக்குலத்தோர் சமூகத்தின் முகமாகக் காட்டி வரும் ஆர்பி.உதயகுமாரின் உண்மை நிலையை அறிவுறுத்தவும், தன் ஆதரவாளர்களைத் திரட்டி வந்து தென்மாவட்டத்தின் மையமாக அடையாளப்படுத்தி, ஆர்பி.உதயகுமாரின் கோட்டையை அடித்து நொறுக்கி காலி செய்யவே, ஓபிஎஸ் திருமங்கலத்தை தேர்ந்தெடுத்தார் என்கின்றனர்.

எடப்பாடியை விட ஓபிஎஸ்சை கடுமையாக ஆர்பி.உதயகுமார் விமர்சித்து வந்தார். தென்மாவட்டத்தில் ஓபிஎஸ் தலையெடுத்தால் தனக்கான ஆதரவு அடையாளம் அழிந்து விடும் என்பதால், அவருக்கு எதிராக அவதூறுகளை பேசி வந்தார். கட்சியில் ஓரங்கட்டும் நடவடிக்கையும் செய்து வந்தார் என்ற ஆதங்கம் ஓபிஎஸ்சிடம் அதிகமிருக்கிறது. குறிப்பாக, ராமநாதபுரம் மக்களவைத்தொகுதியில் 2024ல் சுயேச்சை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டபோது, அதே பெயரில் மட்டுமே 5 பேரை களமிறக்கி, வாக்காளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியதில் ஆர்பி.உதயகுமாருக்கு முக்கிய பங்குண்டு என்பார்கள்.

ஆனாலும், ஓபிஎஸ் அந்த தேர்தலில் 3 லட்சத்து 42ஆயிரத்து 882 வாக்குகளை பெற்று தனக்கான ஆதரவு வலிமையை அடையாளம் காட்டிக் கொண்டார். அதனால்தான் ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததும், முதல் இணைப்பு விழாவிற்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை தேர்ந்தெடுத்தார் என்கின்றனர். அத்தோடு திமுகவிற்கென கணிசமான வாக்குகள் இத்தொகுதியில் உள்ள நிலையில், ஓபிஎஸ்சின் இணைப்பு விழா மூலம் தென்மாவட்டங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றியை குவிக்கும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்…!

* ஓபிஎஸ் அணியினர் 50,000 பேர் திமுகவில் ஐக்கியம்
திமுகவில் இணைந்த நிலையில், ஓபிஎஸ் தலைமையில் இயங்கி வந்த அதிமுக தொண்டர் மீட்பு கழக நிர்வாகிகள் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று திருமங்கலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் விழாவில் இணைய உள்ளனர்.

Tags : Thirumangalam ,OPS ,AIADMK ,MLA ,minister ,DMK ,Chief Minister ,M.K. Stalin ,Chief Minister… ,
× RELATED தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில்...