×

தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழக பாஜ சார்பில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வெளிமாநில பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள பாஜ தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பாஜ தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்கினார்.

மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் தலைமையில் தேர்தல் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது. கூட்டத்தில் தேர்தல் பணிகள், திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், துணை தலைவர்கள் ஆர்.என்.ஜெயபிரகாஷ், கரு.நாகராஜன், மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதற்கான கால அவகாசம் நமக்கு உள்ளது. சமீபத்தில் மதுராந்தகம் மற்றும் மதுரையில் நடந்த பிரதமர் மோடியின் பொதுக்கூட்டங்கள் தமிழக மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. சாலையில் செல்வோரை தாக்கும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. பொங்கல் பரிசு முதல் கோடைகால நிதியுதவி வரை அனைத்தும் மக்களின் நலனுக்காக அல்ல, அவர்களின் ‘வாக்குகளை’ வாங்குவதற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன” என்றார்.

Tags : National Democratic Alliance ,Nainar Nagendran ,Chennai ,Tamil Nadu BJP ,Chennai… ,
× RELATED ஊட்டியில் 150 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞர் உயிருடன் மீட்பு