- சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி
- தலைமை நீதிபதி
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஆளுநர் ஆர் என் ரவி
- சென்னை
- 55வது
- தலைமை நீதிபதி
- எம்.எம். ஸ்ரீவஸ்தவா
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 55வது தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, பணி ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி நேற்று பதவியேற்றார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய தலைமை நீதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் அமைச்சர் ரகுபதி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஜெ.ரவீந்திரன், ஆர்.நீலகண்டன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்,
மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கடராமன், அரசுத்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், உயர் நீதிமன்ற பதிவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து 1992ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2000ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை வருமான வரித்துறை, வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றிய அவர் 2018ம் ஆண்டு மத்திய பிரதேச நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட எஸ்.ஏ.தர்மாதிகாரி தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இதையடுத்து, நேற்று மாலை உயர் நீதிமன்றம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வரவேற்று பேசும்போது, போபால் விஷ வாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி நீதிமன்றங்களில் வாதிட்டவர் என்றார்.
